கைதிகளுக்கு வெளிச்சம் கொடுக்குமா மூனின் வருகை?
                       

தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்;தங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகவே வடக்கு-கிழக்கு தமிழர் புதிய ஆட்சி மலர்வதற்கு பிரதான காரணமாக இருந்தனர்.

மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் தமிழர்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு சென்ற நிலையில்தான் இந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.தமிழர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக இந்த ஆட்சிக் காலத்தை அவர்கள் பார்க்கின்றனர்.

ஆட்சி மலர்ந்த புதிதில் மக்களை கவரும் வகையில் சில நடவடிக்கைகளை அரசு அதிரடியாக எடுத்ததுபோல் தமிழர்கள் சார்பிலும் சில நடவடிக்கைகளை எடுத்தது.அவற்றுள் முக்கியமானதாக காணிகள் விடுவிப்பைக் குறிப்பிடலாம்.மேலும் சில நல்ல விடயங்களையும் செய்தது.

இதனைத் தொடர்ந்து தமிழர்களின் நீண்ட காலப் பேரவலங்களுள் ஒன்றான அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப் புள்ளியை தமிழர்கள் எதிர்பார்த்தனர்.அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்து போராட்டம் தொடங்கப்பட்டது.கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி நாடுபூராகவும் உள்ள சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க அந்தப் போராட்டத்தை பலப்படுத்தும் வகையில் வெளியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்தப் போராட்டத்துக்கு செவி சாய்த்த ஜனாதிபதி  அதற்கு  தீர்ப்பு ஒன்று அறிவிக்கப்படும் என்று   அறிவித்தத்தைத் தொடர்ந்து அந்த 10 நாள் போராட்டம் ஒக்டோபர் 17 ஆம் திகதி  தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.நவம்பர் 5 ஆம் திகதி அரசின் தீர்மானமும் வெளியானது.

அந்தத் தீர்மானத்தின்படி,தண்டனை வழங்கப்பட்ட கைதிகள்,நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டு வரும் கைதிகள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் என அந்தக் கைதிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

அவர்களுள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 62 கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்றும் அந்த 62 பேரில் 32 கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்படுவர் என்றும் அரசு அறிவித்தது.இந்தத் தீர்மானத்தை கைதிகள் ஏற்க மறுத்தனர்.அனைத்துக் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்தனர்.இந்தக் கோரிக்கையை முன்வைத்து கைதிகள்  மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

ஜனாதிபதி மீண்டும் அந்தப் போராட்டம் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்.இது தொடர்பில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதேவேளை,பொது மன்னிப்பு அல்லது புனர் வாழ்வின் ஊடாக  தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி அந்தக் கைதிகள் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றையும்  அனுப்பி வைத்தனர்.

அந்தக் கடிதம் தொடர்பில் ஜனாதிபதி சட்டமாதிபருடன் கலந்தாலோசித்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டு வரும் 85 கைதிகளுக்குப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்தல் என்ற ஒரு தீர்மானத்துக்கு  வந்தார்.

அரசியல் கைதிகள் அந்தத் தீர்மானத்தை ஏற்று ஒரு மாதத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த  உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

அந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டு  10 நாட்களுக்குள் அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நடவடிக்கை தொடங்கப்படும் எனவும்  அரசு அப்போது அறிவித்தது.

இந்தத் தீர்மானம் காரணமாக கைதிகளின் போராட்டம் வெற்றி பெற்றது என்றே அப்போது கருதப்பட்டது.ஆனால்,அரசின் தீர்மானம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.ஒரு சில கைதிகளே புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனால்,இந்த மாதம் 7ஆம் திகதி மீண்டும் கைதிகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.கைதிகளின் உறவினர்களும் இதற்கு ஆதரவு வழங்கி சிறைச்சாலைகளுக்கு வெளியே போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு அரசு நாளை புதன் கிழமை பதில் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.ஐ.நா பொது செயலாளர் பாங்கி மூன் இலங்கை வரவுள்ள அதே தினத்தில் அரசு இந்தத் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இது மூனுக்கு படம் காட்டும் செயலா அல்லது உண்மையாகவே அரசு தீர்மானம் ஒன்றை எடுக்கப் போகிறதா என்ற சந்தேகமும் வலுக்கத்தான் செய்கிறது.சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ள இந்த விவகாரத்துக்கு இனிமேலும் முற்றுப் புள்ளி வைக்காமல் இருந்தால் அது நல்லாட்சிக்குத்தான் இழுக்கு.

இந்த அரசியாக கைதிகள்  பல வருடங்கள் சிறையில் காலத்தைக் கடத்திவிட்டனர்.அவ்வாறு கடத்தப்பட்ட காலத்தைத் தண்டனைக் காலமாகக் கருதி-அந்தக் காலத்தில் அவர்களின் குடும்பங்கள் அடைந்த துன்பத்தையும் தண்டனையாகக் கருதி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதுதான் நியாயமாகும்.மனசாட்சியுள்ள ஜனாதிபதிக்கு இது ஒரு பெரிய விடயமல்ல.

அவர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்து-குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அந்தத் தண்டனைக் காலம் ஒருவேளை இப்போது முடிவுற்றும் இருக்கலாம்.
இதையெல்லாம் கணக்கில் எடுத்துப் பார்த்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது நியாயமாகும்.

அப்படி பொது மன்னிப்பு வழங்கினாலும்கூட அது அவர்கள் தண்டனையை அனுபவித்து வெளியேறுவதற்கு சமமானதே என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இப்போது நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்து அவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறையில் சிறையில் அநியாயமாகக் கழித்த வாழ்க்கையை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்?

ஆகவே,அவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவதற்கு போதுமான நியாயமான காரணங்கள் இருக்கின்றன.ஜனாதிபதி இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்;நல்லாட்சி என்ற பதத்துக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும்.

 [ எம்.ஐ.முபாறக் ]

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top