மஹிந்தவின் பாவத்தை சுமக்கும் நல்லாட்சி;
விஷ ஊசி விவகாரத்தால் மேலும் தலையிடி
போர் வெற்றி என்ற ஒன்று கேடயமாக இருக்கும்போது எதையும் செய்யலாம்-எந்தவொரு பெறிய பாவத்தையும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டில்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சி இருந்தது.யுத்த காலத்தின்போதும் யுத்தம் முடிந்த பின்பும் மேற்கொள்ளப்பட்டு வந்த மனித உரிமை மீறல்கள் அனைத்தும் புலிகளுக்கு எதிரான-புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு எதிரான நகர்வுகளாகவே மக்களுக்கு காட்டப்பட்டன.
மனித உரிமை மீறல்கள் மாத்திரமன்றி ஊழல்,மோசடிகள் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தும் போர் வெற்றி என்ற போர்வையைக் கொண்டே மூடப்பட்டன.
இவற்றுள் தமிழருக்கு எதிரான செயற்பாடுகள் சற்று அதிகமாகவே இருந்தன.தமிழர்கள் அனைவரும் புலிகளாக அல்லது புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்களாக பார்க்கப்பட்டமையே இதற்கு காரணம்.
புலிகளை ஒளித்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்;கடத்தப்பட்டனர்;காணாமல் செய்யப்பட்டனர்.இவை புலிகள் தோற்றம் பெற்று போர் தொடங்கியது முதல் இடம்பெற்று வந்தன.யுத்தம் முடிந்த பின்பும் இந்த செயற்பாடுகள் முடிவுக்கு வந்திருக்கவில்லை.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழர்கள் இப்போது இந்த அநீதிகளுக்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.மஹிந்தவின் ஆட்சியில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் அதற்கு முன்பு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் மஹிந்தவின் ஆட்சியில் நீதியைப் பெற முடியாமல் இருந்ததால் இப்போது இந்த மைத்திரி-ரணில் ஆட்சியில் நீதி கேட்டுப் போராடுகின்றனர்.
தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் போன்றவை மஹிந்தவின் ஆட்சியில்தான் அதிகம் இடம்பெற்றன .அவை சர்வதேசத்தின் கவனத்தை அதிகம் ஈர்த்தன.இதனால் அதற்கு நீதி வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மஹிந்தவின் ஆட்சியில் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட எந்தவோர் அநீதிக்கும் நீதி பெற்றுக் கொடுக்கப்படவே இல்லை.நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக நடவடிக்கை எடுப்பதுபோல் சர்வதேசத்துக்கு படம் காட்டிக்கொண்டு அநீதியைத்தான் அவர் செய்தார்.அவரது ஆட்சியின் இறுதித் தருவாய் வரை இந்தக் கொடுமை தொடர்ந்தது.
கடத்தல்,காணாமல் ஆக்கப்பட்டமை,போர்க் குற்றங்கள் மற்றும் இடம்பெயர்வு என அத்தனை பாவங்களையும் இப்போது மைத்திரி-ரணில் அரசுதான் சுமக்கின்றது.இவை அனைத்துக்கும் உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இந்த அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
புதிய ஆட்சி மலர்ந்தது முதல் போர்க் குற்ற விசாரணை மற்றும் காணாமல் போனோரைக் கண்டு பிடித்தல் போன்ற பொறுப்புக்கள் இந்த அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளன.போர்க் குற்ற விசாரணைக்கான உள்ளகப் பொறிமுறை அமைக்கப்படும் என்ற ஒரு வாக்குறுதியை இந்த அரசு ஐ.நாவுக்கு வழங்கி இப்போது அந்த வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
அதேபோல்,காணாமல் போனோர் விவகாரத்தைக் கையாள்வதற்காக-அதற்கு நீதியைப் பெற்றுக் கொடுத்து அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை அரசு நிறுவவுள்ளது.அதற்கான சட்ட அங்கீகாரம் நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விவகாரங்களும் நேரடியாகப் படையினரைப் பாதிக்கும் விடயங்கள் என்பதால் அரசு செய்வதறியாது தடுமாறுகின்றது.படையினருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இவை தொடர்பில் தமிழருக்கு எவ்வாறு நீதியைப் பெற்றுக் கொடுப்பது என்று அரசு யோசித்துக் கொண்டு இருக்கின்றது.
படையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் அவர்களைத் தண்டிக்காமல் பொறுப்புக் கூறலை மாத்திரம் நிறைவேற்றி அதையே நீதியாகப் பெற்றுக் கொடுத்தல் என்ற ஒரு திட்டமும் அரசிடம் உண்டு.
இந்த நிலையில்,இன்னுமொரு மேலதிக தலையிடியை இந்த அரசு இப்போது சந்தித்துள்ளது.புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளின் உடலில் அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் படையினர் விசம் கலந்தனர் என்ற செய்தியே அந்தத் தலையிடியாகும்.
முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் இந்த விவகாரத்தை போட்டுடுடைத்ததைத் தொடர்ந்தே இந்த விவகாரம் இப்போது இலங்கை அரசியல் அரங்கை சூடாக்கிக் கொண்டு இருக்கின்றது.இவ்வாறு விசம் ஏற்றப்பட்டு 105 புலி உறுப்பினர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர் என்ற செய்திதான் இந்த விவகாரம் பூதாகாரமாவதற்கு காரணமாகும்.
வழமைபோல்,அரசும் படையினரும் இதை மறுத்துள்ளபோதிலும்,இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொறுப்பை அரசால் தட்டிக் கழிக்க முடியாது.இதற்கு அரசும் உடன்படுகின்றது.விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்டு அந்தப் அவர்களின் உடல்கள் சோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளதால் அரசு அதற்கு இப்போது தயாராகி வருகின்றது என்று அறிய முடிகின்றது.
போர் குற்ற விசாரணை மற்றும் காணாமல் போனோர் விவகாரம் போன்று இதுவும் அரசுக்கு தலையிடியாக மாறியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.மேற்படி இரண்டு விவகாரங்களுக்கும் இன்னும் நீதி வழங்கப்படாத நிலையில் மூன்றாவதாக இந்த விவகாரம் கிளம்பியுள்ளது.
மஹிந்தவின் ஆட்சில் இடம்பெற்ற அத்தனை பாவங்களையும் மைத்திரி-ரணில் அரசுதான் இப்போது சுமந்து செல்கின்றது.அதற்கான பரிகாரங்களை செய்யும் பொறுப்பு இந்த அரசு மீது சுமத்தப்பட்டுள்ளது.அந்த அடிப்படையிதான் இந்த விவகாரமும் அமைந்துள்ளது.
இருந்தும்,இது தொடர்பில் தமிழருக்கு நீதி கிடைக்குமா,படையினர் தண்டிக்கப்படுவார்களா என்பதும் சந்தேகமே.படையினருடன் தொடர்புபட்ட விவகாரங்களை இந்த அரசால் நினைத்தவாறு கையாள முடியாது.படையினருக்கு ஆபத்து ஏற்படாதவகையில் அவற்றைக் கையாளும் கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
போர்க் குற்ற விசாரணை நடத்துவதற்காக உள்ளகப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு அரசு எடுத்த தீர்மானத்தால் படையினர் அரசு மீது கடுப்பாக இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.இந்த விவகாரத்தால் அரசுக்கும் படையினருக்கும் இடையிலான உறவு அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என்பதையும் அறிவோம்.
இந்த நிலையில்,படையினருக்கு எதிரான மற்றுமொரு விவகாரத்தை கையாள்வது என்பது-அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது அரசால் முடியாத காரியம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த விவகாரத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு மஹிந்த தரப்பு காத்துக்கொண்டு இருப்பதையும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டி இருக்கின்றது.அதற்காக-படையினரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக தமிழருக்கான நீதியை மறுக்க முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
மஹிந்தவின் மோசமான ஆட்சியால் இன்று இந்த அரசு அடுத்தடுத்து தலையிடியை சந்தித்து வருகின்றது.அவர் பாவத்தை இவர்கள் சுமக்க வேண்டி உள்ளது.இதுபோல் இன்னும் எத்தனை தலையிடி வரப் போகின்றதோ?
[ எம்.ஐ.முபாறக் ]
0 comments:
Post a Comment