தமிழக சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு
இப்படித்தான் நடக்கும்!
தமிழக சட்டசபை வரலாற்றில் 29 ஆண்டுகளுக்குப் பின், இப்போதுதான் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறது.
அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர்
1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்ததும், அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார். அப்போது, ஜானகி அணியினர் ஒரு பிரிவாகவும், அந்த நேரத்தில் அ.தி.மு.க கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அணியினர் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டனர்.
பின்னர் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அதில் வெற்றிபெற்ற போதிலும், பின்னர் அதே ஆண்டு பெப்ரவரி மாதம் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு, தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் மீண்டும் அதுபோன்றதொரு சூழல் உருவாகி உள்ளது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி முதல்வராகி உள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணி தனியாகச் செயல்படுகிறது.
இன்று வாக்கெடுப்பு
இப்படித்தான் நடக்கும்!
சட்டசபை கூடும் நேரமான காலை 11 மணிக்குள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவை மண்டபத்துக்குள் சென்றுவிட வேண்டும். 11 மணிக்கு கூட்டம் என்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன், அதாவது 10 மணி முதல் உறுப்பினர்கள் பேரவைக்குள் அனுமதிக்கப்படுவர். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை பேரவை வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள காவலர்களிடம் காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். சட்டப்பேரவையில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கு கோரும் அலுவலைத் தவிர வேறு ஏதும் இடம்பெறாது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண்ணிலேயே அமர வேண்டும். வேறு இருக்கையில் அமரக்கூடாது. இதனை சபைக் காவலர்கள் கண்காணிப்பார்கள்.
பேரவைக் கூட்டத்தை சரியாக 11 மணிக்கு, வழக்கமான முறையில் தொடங்கி நடத்துவார், சபாநாயகர் ப.தனபால். முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டம் தொடங்கியதும் தனது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிவார். தொடர்ந்து, அவரது தீர்மானத்தை மற்றொருவர் (அவை முன்னவர் அல்லது வேறு உறுப்பினர்) வழிமொழிவார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும், சட்டப்பேரவை மண்டபத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுவிடும். தாமதமாக வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது பத்திரிகையாளர்களுக்கோ அனுமதி கிடையாது. முதல்வர் முன்மொழிந்து, மற்றொருவர் வழி மொழிந்த தீர்மானம், உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். ஒவ்வொரு குழுவாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அதாவது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, வேறு கட்சி என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெறும்.
ஒவ்வொரு வரிசையாக வாக்கெடுப்பு நடைபெறும். அந்த வரிசையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும், வாக்கெடுப்பு முடிவில் ஆதரவு, எதிர்ப்பு மற்றும் நடுநிலைவகிப்போர் என அனைவரின் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என்பதை சபாநாயகர் கண்காணிப்பார். அரசுக்கு ஆதரவளிப்போர், எதிர்ப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் எவ்வளவு பேர் என்பது அனைத்து உறுப்பினர்களும் அறியும் வகையில் ஒளி உமிழும் விளக்குகளில் தெரிவிக்கப்படும், இந்த முறை ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள ஒரு தொகுதி தவிர 233 சட்டப்பேரவை உறுப்பினர்களில் சபாநாயகர் தவிர்த்து 232 பேர் வாக்களிப்பர். நியமன உறுப்பினரான ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் வாக்களிக்க முடியாது. 232 பேரில் அரசுக்குப் பெரும்பான்மை என்றால், 117 பேர் ஆதரவு தேவை. எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு 89 பேரும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 பேரும் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும் உள்ளனர். எடப்பாடி அணிக்கு 124 பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் முடிவே இறுதியானது. முடிவை அவரே அறிவிப்பார்.
இரு தரப்புக்கும் சமநிலை ஏற்படும்பட்சத்தில், தேவைப்பட்டால் சபாநாயகர் வெற்றியை தீர்மானிக்க அவர் விரும்பும் அணிக்கு வாக்களிக்க பேரவை விதி வகைசெய்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க வாக்களிக்கும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, வாக்கெடுப்புக்கு முன் வேறு நிலைப்பாட்டையும் எடுக்க வாய்ப்புள்ளது. இதேபோல 8 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியும் அரசை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஓ.பி.எஸ் அணியினர், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால், அவர்களை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் எடப்பாடி தரப்பு கோரிக்கை விடலாம். ஆனால், அதுபற்றி சபாநாயகர் உடனடியாக முடிவை அறிவிக்க மாட்டார். இதேபோல், பதிலுக்கு எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது ஓ.பி.எஸ் தரப்பும் குற்றச்சாட்டு கூற முடியும். அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ-க்களில் குறைந்தது 8 எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்து வாக்களித்தால், அரசு பெரும்பான்மை பலத்தை இழக்கும். அப்படி இழக்கும் தருவாயில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் முடிவு செய்வார். சட்டசபையில் பெரும்பான்மை பலம் தொடர்பான முடிவை சபாநாயகர், ஆளுநருக்கு அறிக்கையாகத் தயாரித்து அனுப்ப வேண்டும்.
எடப்பாடி அரசு தப்புமா அல்லது கவிழுமா என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment