அமெரிக்க தடகள வீரரான மைக்கேல் ஜான்சனிடம்
மன்னிப்பு கேட்ட உசைன் போல்ட்!
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு "லாரஸ்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. விளையாட்டு உலகின் "ஆஸ்கார்' விருதாக மதிக்கப்படும் இந்த விருது, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில்,
2017-ஆம் ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கும் விழா ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது, ஜமைக்க ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சைமன் பில்ஸ் "சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருது வென்றுள்ளார்.
அமெரிக்க தடகள வீரரான மைக்கேல் ஜான்சனிடம் விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு, பார்வையாளர்களிடையே பேசிய உசேன் போல்ட், "இந்த அற்புதமான விருது வழங்கியதற்காக நன்றி. எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக லாரஸ் விருதை கருதுகிறேன். அதையும் 4-ஆவது முறையாக பெற்றுள்ளதன் மூலம், ஃபெடரர் போன்ற வீரர்களின் வரிசையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார். இதில் உசேன் போல்ட், 4-ஆவது முறையாக இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த விருதை 4 முறை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அலைச் சருக்கு (சர்ஃப்) வீரர் கெல்லி ஸ்லேட்டர் ஆகியோரின் வரிசையில் உசேன் போல்ட் இணைந்துள்ளார்.
உசேன் போல்ட்டுக்கான விருதை, அமெரிக்க தடகள வீரரான மைக்கேல் ஜான்சன் வழங்கினார். அப்போது அவர், "எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள். மற்றவர்களின் சாதனையை மட்டுமாவது விட்டு வைத்திருங்கள்' என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அதற்கு உசேன் போல்ட், "உங்களது சாதனையை முறியடித்ததற்காக மன்னித்துவிடுங்கள்' என்று அதே நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment