லண்டன் 24 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை
ரமழான் ஸஹருக்காக ஆயத்தம் செய்து விழித்து இருந்த முஸ்லிம் வாலிபர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இங்கிலாந்து தலைநகரம் வடக்கு கென்சிங்டனில் உள்ள 24 மாடி குடியிருப்பில் நேற்று தீ பிடித்தது. இதில், அடியில் உள்ள 4 மாடிகள் தவிர அனைத்து மாடிகளும் எரிந்து நாசமாகின.
இந்த தீ விபத்தில் இதுவரை 12 பேர் இறந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 74 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் மொத்தம் 120 வீடுகள் இருந்தன. தீ விபத்து நடந்த போது, 500 பேர் வரை வீடுகளில் இருந்ததாக தெரிகிறது. இவர்களில் ஏராளமானோர் உயிர் தப்பி உள்ளனர்.
இறந்து போன 12 பேர் தவிர, மேலும் பலர் உயிர் இழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. வீடுகளில் தங்கி இருந்தவர்கள் யார்? அவர்களில் உயிர் தப்பியவர்கள் யார்? என்பதை இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.
இதற்கான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதன் பிறகுதான் இறந்தவர்கள் பற்றிய முழு விவரமும் தெரிய வரும். இறந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் சிறிய அளவில் தீ எரிந்து கொண்டு இருக்கிறது. அவற்றையும் அணைக்கும் பணி நடந்து வருகிறது.
முழுமையாக தீயை அணைத்த பிறகு தீயணைப்பு படையினர் உள்ளே சென்று பார்க்க உள்ளனர். அப்போதுதான் இறந்தவர்கள் பற்றிய மேலும் விவரங்கள் தெரிய வரும்.
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. மொத்தம் உள்ள 24 மாடிகளில் அடியில் உள்ள 4 மாடிகளில் அலுவலகங்கள், சமூக கூடங்கள் செயல்பட்டு வந்துள்ளன. அதற்கு மேல் உள்ள 20 மாடிகளிலும் குடியிருப்புகள் இருந்துள்ளன.
கட்டிடத்தின் 8-வது மாடியில்தான் முதலில் தீ பிடித்துள்ளது. பின்னர் தீ கட்டிடம் முழுவதும் பரவி உள்ளது.
அதிகாலை 1.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அனைவரும் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் தீ விபத்து ஏற்பட்டது பலருக்கு தெரியவில்லை.
ஆனால், இந்த குடியிருப்பில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் ரமழான் மாதத்தில் நோன்பு இருந்தனர். அவர்கள் ஸஹர் செய்வதற்காக உணவு தயாரிப்பதற்காக விழித்திருந்தார்கள். கட்டிடத்தின் அருகில் மசூதி ஒன்று உள்ளது. அங்கும் உணவு தயாரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டு இருந்தனர்.
இவர்கள் விழித்திருந்ததால் கட்டிடத்தில் தீ பிடித்ததும் இவர்களுக்கு தெரிய வந்தது. உடனே கட்டிடத்தில் இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தவர்களை கதவை தட்டி எழுப்பினார்கள். பலரை கீழே கொண்டு வருவதற்கு உதவினார்கள். இதனால் தான் ஏராளமானோர் உயிர் பிழைக்க முடிந்தது.
இது சம்பந்தமாக விபத்தில் தப்பிய பெண் ஒருவர் கூறும் போது, நாங்கள் இங்கே உயிரோடு இருப்பதற்கே முஸ்லிம் வாலிபர்கள் தான் காரணம். தீ பிடித்தது பற்றி தெரிந்ததும் ஒவ்வொரு மாடிக்கும் ஓடி வந்து எங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி காப்பாற்றினார்கள் என்று கூறினார்.
இந்த கட்டிடத்தின் 8-வது மாடியில் காலிப் சுலைமான் அகமது (வயது 20) என்பவர் குடியிருந்தார். அவர் இதுபற்றி கூறியதாவது:-
நான் எனது வீட்டில் அத்தையுடன் குடியிருந்து வந்தேன். நான் ரம்ஜான் நோன்பு இருக்கவேண்டியிருந்ததால் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்போது ஏதோ எரிவது போன்ற வாசனை வந்தது. எனவே ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தேன். அப்போது 7-வது மாடி எரிந்து கொண்டு இருந்தது.
உடனே எனது அத்தையை எழுப்பி தப்பி செல்லும்படி கூறினேன். பின்னர் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கெல்லாம் சென்று கதவை தட்டி எழுப்பி வெளியேற செய்தேன்.
ஆனால், கீழே வரும் பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக இருந்தது. பலரும் தப்பிப்பதற்கு தேவையான உதவிகளை செய்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த கட்டிடத்தில் தீ விபத்து பாதுகாப்பு வசதிகள் சரியாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. தீ பிடித்தால் எச்சரிக்கை செய்யும் கருவியும் இல்லை.
இதேபோல் லண்டனில் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளது. இவற்றை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் தெரசா மே கூறும்போது, இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். இந்த தீ விபத்து எங்களுக்கு பல்வேறு பாடங்களை கற்று தந்துள்ளது.
இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
தீ விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், பொலிஸார் அதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. 8-வது மாடியில் ஒரு வீட்டில் இருந்த பிரிட்ஜ் பழுது காரணமாக தீ பிடித்து விட்டதாக தகவல் வந்துள்ளது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment