இலங்கை பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழுவொன்று, அடுத்த மாதம், பங்களாதேஷின் டாக்காவுக்குப் பயணமாகின்றது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள், 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த ஆண்டு முடிவில் மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு பிரமாண்டமான வளர்ச்சி என்றும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் ரியாஷ் ஹமிதுல்லா சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே, அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

'கடந்த ஐந்து வருடங்களாக பங்களாதேஷுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு நாடுகளும் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். பங்களாதேஷூவுடனான வர்த்தக மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை இலங்கை எதிர்பார்த்து நிற்கின்றது' என, அமைச்சர் ரிஷாட் கூறினார்.

அத்துடன், இலங்கையின் வர்த்தகத் தூதுக்குழுவை, பங்களாதேஷ் வரவேற்பதாக, அந்நாட்டின் தூதுவர், அமைச்சரிடம் தெரிவித்தார்.

'2010ஆம் ஆண்டு, இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், 48 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 2016ஆம் ஆண்டு மும்மடங்காக அதாவது, 142 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது' என்று, வர்த்தகத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பங்களாதேஷுக்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக பருத்தி, பிளாஸ்டிக், துணிவகைகள், சவர்க்காரம், மசகுப் பொருட்கள் மற்றும் தூய்மைப்படுத்தும் திரவங்கள் என்பவற்றைக் குறிப்பிடமுடியும் என, குறிப்பிட்ட வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி, பங்களாதேஷில் இருந்து மருத்துவப் பொருட்கள், கடதாசி, உருக்கு போன்றப் பொருட்களை  இலங்கை இறக்குமதி செய்வதாகக் குறிப்பிட்டார்.


பங்களாதேஷில் 45 இலங்கை நிறுவனங்கள், 300 மில்லியன் அமெரிக்க டொலர் வகையிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top