கவிக்கோ அப்துல் ரஹ்மானின் மறைவு

தமிழ் கூறும் உலகுக்கு பாரிய இடைவெளி

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்



உலகப் பெரும் கவிஞரும், தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரஹ்மானின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தான் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வானம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்து இயங்கிய தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த தமிழ் பேராசானின், எழுத்துக்களின் தாக்கம் இலங்கை எழுத்தாளர்களையும் ஆகர்ஷித்ததுடன் அவர்களை எழுதத் தூண்டியது. அதுமாத்திரமன்றி சிறந்த எழுத்தாளர்களாகவும் அவர்களை ஆக்கியது. பேராசிரியர் கவிக்கோ தமிழில் ஹைக்கூ ,கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை புனைந்ததிலும், அவற்றை பரப்பியதிலும் முன்னணி வகித்தவர்.
கவிக்கோ இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவராக இருந்து தனது வாழ் நாளில் ஒன்பது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றார். 2014ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாடு இசைக்கு முக்கியத்துவம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கவிக்கோ சிறந்த தமிழ்ப் பற்றாளர். நல்ல பண்பாளர், விருந்தோம்பும் பண்பு உடையவர்.தமிழ் வாழும் தோறும் கவிக்கோவின் எழுத்துக்கள் வாழும்.

அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக,ஆமீன்.இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top