அமைச்சர் ஹக்கீமின் ஆதரவு ஊடகங்களில் அவரின் பேச்சை புகழ்வதாக நினைத்து ஒரு செய்தி பதிவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. அச் செய்தியில்
முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும். ஆனால்,அவை வெளியில் சொல்ல முடியாத அளவுக்குப் பாரதூரமானவைஎன அவர் கூறியதாக பதிவிடப்பட்டுள்ளது.
இன்று முஸ்லிம்கள் சமூகம் இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயல்களை யார் செய்கிறார்கள் என தவித்து கொண்டிருக்கின்றார்கள். இந் நிலையில் அமைச்சர் ஹக்கீம் இனவாதிகளின் பின்னால் உள்ள சக்திகளை அறிவாராக இருந்தால் அதனை வெளிப்படுத்துவதில் என்ன தயக்கம் உள்ளது?
அவர் இதனை வெளிப்படுத்துகின்ற போது அதற்கு ஏற்ப முஸ்லிம் சமூகம் தனது இனவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பிலான நகர்வுகளை கொண்டு செல்வார்களே? அல்லது அவர்களை வெளிப்படுத்தாது மறைத்து சாணக்கியமாக அழிக்க வேண்டிய தேவைகள் இருப்பின் அமைச்சர் ஹக்கீம் இதுவரை இனவாதம் தொடர்பில் மேற்கொண்டிருக்கும் காத்திரமான நடவடிக்கை தொடர்பில் அறியப்படுத்துவாரா?
ஒருவர் வீதியில் செல்லும் போது வேண்டுமென்றே அவரை ஒருவர் முட்டி விபத்துக்குள்ளாக்குகின்றார். குறித்த வீதியில் சென்ற நபருக்கு நீதி பெற்றுக்கொடுப்பதோடு வேண்டுமென்று முட்டிய நபர்  தண்டிக்கப்படல் வேண்டும். இவ் விபத்தை நன்கு அவதானித்த ஒருவருக்கு யார் முட்டினார் என்பது தெரியும். அவருக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றால் அவரை மாட்டி விடுவார். அவர் தனது முதலாளியாக இருந்தால்..?? வெளிப்படுத்துவாராதொழில் போய் விடுமே! இதனால் தான் அமைச்சர் ஹக்கீம் அதனை வெளிப்படுத்த தயங்குகிறாரோ தெரியவில்லை.
இவர் இனவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக எவ்வாறு கதைக்க வேண்டும் என்பதை அமைச்சர் றிஷாதிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஞானசார தேரரின் கைது நடவடிக்கை வெறும் நாடகமென பாராளுமன்றத்தில் வைத்து கூற எத்தனை துணிவு வேண்டும்? இருந்தாலும் அமைச்சர் றிஷாத் முஸ்லிம் சமூகத்துக்காக எவரையும் எதிர்ப்பார். காலத்தின் தேவை கருதி அவரை பலப்படுத்துவது இலங்கை முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
இப்படித் தான் மாமனிதர் அஷ்ரப் அவர்கள் மரணித்தற்கு பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாமனிதர் அஷ்ரஃபின் மரணம் தொடர்பாக கடந்த 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்முனை நகர மண்டபத்திற்கு முன்னால்  (அமானா வங்கி) இடம்பெற்ற ‘மக்கள் நீதிமன்றத்திற்கு முன் முறையீடு  என்னும் தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் நிகழ்த்திய உரையை மர்ஹும் அஷ்ரஃபின் விசுவாசிகள் பலரும் இன்றும் மறந்துவிடமாட்டார்கள். அவர் பேசிய அந்தப் பேச்சை   நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
 மு. காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அக்கூட்டத்தில் என்ன பேசினார்?
தலைவர் அஷ்ரஃபின் மரணத்தின் பின்னணியிலே நடந்த பல விடயங்கள் இன்னும் பகிரங்கமாகச் சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அப்படியான பல விடயங்கள் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் நேரில் வந்தும் எங்களிடம் சொல்கிறார்கள். எழுதியும் தருகிறார்கள். கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது ஒரு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த தலைவருக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கவேண்டும். மறைந்த தலைவரோடு கடைசி மணித்தியாலங்களில் இருந்த பலர் உள்ளனர். பலவிதமான திடுக்கிடும் தகவல்களை அவர்கள் சொல்லுகிறார்கள்.
விசாரணைக்கு முன்வரும்வரை பொறுமையாக  இருந்து இந்த விடயங்களை வெளியிடலாம் என உத்தேசித்திருக்கிறேன்.“ இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசுகையில் கூறினார். இது  வரை மு.காவின் ஸ்தாபாகத் தலைவருக்கு என்ன நடந்தது என்ன புரியாத புதிராக உள்ளது.
இவற்றை மறைப்பதன் மூலம் அமைச்சர் ஹக்கீம் சாதிப்பதென்ன. இவ்வாறானவற்றை மூடி மறைத்தால் அவை பதவி பொக்கிசங்களாக வெளிப்படுப்படுமோ?
அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top