புலத்சிங்கள, யட்டகம்பிற்றிய, நாஹகதொல பிரதேசங்களில்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன கண்காணிப்பு விஜயம்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, யட்டகம்பிற்றிய, நாஹகதொல பிரதேசத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (05) முற்பகல் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.
அதன்போது அழிவடைந்த வீடுகள் மற்றும் காணிகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
பாஹியங்கல மலை மண்சரிவுக்குட்பட்டு நாஹகதொல கங்கையில் ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் நாஹகதொல பிரதேசவாசிகள் வெள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். அந்த இடங்களை கண்காணித்த ஜனாதிபதி அவர்கள், அது தொடர்பான அறிக்கையை விரைவாக வழங்குமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் மண் மேடு விழுந்ததனால் தடைப்பட்டுள்ள நாஹகதொல கங்கையை சீரமைத்தல் தொடர்பான அறிக்கையையும் விரைவாக வழங்குமாறு கூறினார்.
அனர்த்தத்துக்குள்ளான குடும்பங்களிலுள்ள பாடசாலைப் பிள்ளைகளுக்கென விசேட திட்டத்தை அமுல்படுத்துமாறு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், அந்த மக்களினதும் பிள்ளைகளினதும் சுகாதார மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து பார்த்து செயற்படுமாறும் மாவட்ட செயலாளருக்கு கூறினார்.
அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. மீள்குடியேற்றத்துக்காக அக் காணிகள் பொருத்தமானதா என சாத்திய வள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் குடியமர்த்தும் வேலைகளை விரைவுபடுத்துமாறும் மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன் பின்னர் புலத்சிங்கள, யட்டகம்பிற்றிய கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார்.
பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 1650 பேருக்கு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், இதனை அடையாளப்படுத்தும் முகமாக பத்து பேருக்கு ஜனாதிபதி அவர்கள் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
வண. பாஹியங்கல ஆனந்த தேரர், அமைச்சர் மகிந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, களுத்துறை மாவட்ட செயலாளர் யு.டீ.சீ.ஜயலால் உள்ளிட்ட அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment