மேற்கு லண்டனில் அமைந்துள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணி தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த கொடூரமான தீ அனர்த்தத்தில் மக்கள் வாழ்க்கையை எப்படி இழந்தார்கள் என்பதையும், என்ன நடந்தது என்பதையும், ஏன் எதற்காக எனவும் விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது வரையில் குறைந்த பட்சம் 30 பேர் உயிரிழந்துள்ளார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த சடலங்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த ஒருவரது சடலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் பலரின் சடலங்கள் கட்டடத்திற்குள் கிடப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு எவரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இதன்காரணமாக உயிரிழப்புகள் எதிர்பார்க்காதளவு அதிகமாக இருக்கும் என பொலிஸார் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். எனவே அதிகாலை ரம்ழான் நோன்பு அனுசரிக்கும் முன் உணவு எடுத்துக் கொள்ள எழுந்திருந்தனர்.
அந்த நேரத்தில், தீ பற்றியதால் மற்றக் குடியிருப்பு வாசிகளையும் எழுப்பி தப்ப வைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தீ முழுமையாகப் பற்றிக் கொண்டதால், கட்டிடத்தின் உள்ளே பலரும் சிக்கிக் கொண்டனர்.
தப்பிக்க முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளை மாடிகளின் ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்த பரிதாபக் காட்சிகளும் அரங்கேறின.
மேலும் சிலர், வீட்டிலிருந்த துணிகளையே பாரசூட்டைப் போல் பயன்படுத்தி கட்டிடத்தை விட்டு தப்பினர்.
1974-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் கடந்த ஆண்டில்தான் 90 கோடி ரூபாய் மதிப்பில் மறுபுனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை வசதிகள் குறித்து ஏற்கெனவே லண்டன் பத்திரிகைகள் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளன.
24 தளங்களைக் கொண்டுள்ள இந்தக் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து 2 நாள்களாக தீ எரிந்த நிலையில், இந்த 24 மாடி கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் என்ற அபாய நிலையில் உள்ளது.
தற்போது பாதுகாப்புக் கருதி அருகிலுள்ள கட்டிடங்களில் இருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி இறந்து போனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று வரும் தகவல்கள் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.
இந்தநிலையில்,
12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11-வது மாடியிலிருந்து 70 வயது முதியவர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்களை அவர்களது உறவினர்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக 08000961233 என்ற தொலைபேசி எண்ணைக் காவல் துறை அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment