தனியார் பஸ்ஸில் கடத்தப்பட்ட
21 கிலோ கேரள கஞ்சாப்பொதிகளுடன் ஒருவர் கைது
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸில் சுமார் 21 கிலோ கேரளா கஞ்சாப் பொதிகளுடன்,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.எம்.சிறில் தலைமையிலான குழுவினர் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸை வங்காலைப்பாடு சந்தியில் இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான 21 கிலோ 451 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னாரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பேசாலை பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3440 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளதுடன், தற்போது குறித்த சந்தேகநபர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் மற்றும்,போதை மாத்திரைகள் என்பன மன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பேசாலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment