கிழக்கில் முஸ்லிம்களுக்கான

தனி அலகு கோரிக்கை குறித்து

முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டமைப்பு பேசவுள்ளது!

மாவை சேனாதிராசா தகவல்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான அபிலாசைகள் மற்றும் கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரிக்கை என்பன குறித்தும் இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்படும்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகாரம், கிழக்கில் தமிழ்-முஸ்லிம் விவகாரம் என்பன தொடர்பாக, இம்மாத நடுப்பகுதியில் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.
வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இந்தப் பேச்சுக்கள் நடத்தப்படும். அப்போது எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் இருப்பார்கள்.
நாங்கள் பேச்சுக்களை நடத்த வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் இது பிற்போடப்பட்டு வந்தது.
வழிநடத்தல் குழுவில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் நாங்கள் பேச்சுக்களை தொடர்ந்து நடத்துவோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் இருப்பதாகவே கூறிவருகின்றார். அவர் வடக்கு கிழக்கு இணைப்புக்கு தாம் குறுக்காக இருக்க மாட்டோம் என்றும் கூறுகின்றார் என .பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top