அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் ஹர்த்தால்
பஸ்கள் மீதும் கல் வீச்சு
கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று (06) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் முற்று முழுதாக வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் அலுவலகங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், எதுவித போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை.
அக்கரைப்பற்று பிரதேச பிரதான பாதைகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதைகளில் பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மருதமுனை பிரதேசத்தில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பஸ்கள், கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அக்கறைப்பற்றுக்கான பஸ் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.
மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்ததுடன், அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.
0 comments:
Post a Comment