கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை
வழிநடத்திய பௌத்த பிக்குகள்
கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவர்கள் இருவரும், நேற்றுமுன்தினம் தெல்தெனியவுக்குச் சென்றதை அடுத்தே, அங்கு அமைதியற்ற நிலை தோன்றியதாக முஸ்லிம் தலைவர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
அதேவேளை, திகண, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த பகுதிகளில் பௌத்த பிக்குகள் பலரையும் காண முடிந்தது.
முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலினால் காயமடைந்து மரணமான சிங்கள சாரதியின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சென்றிருந்தார்.
இதற்குப் பின்னரே, திகணவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்தன.
அதேவேளை, இந்த வன்முறைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 24 சிங்களவர்களை விடுவிக்கக் கோரி, தெல்தெமனிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரே தலைமை தாங்கியிருந்தார்.
மரணமான பாரஊர்தி சாரதி, அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் உறவினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, வன்முறையில் ஈடுபட்ட குழுவினரை பௌத்த பிக்குகள் சிலர் வழிநடத்துகின்ற, காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் காவியுடையுடன் பௌத்த பிக்குகள் காணப்படும் நிலையில், இந்தச் சம்பவங்களை பௌமத்த பிக்குகள் சிலரே தூண்டிவிட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதேவேளை, வன்முறைகளைத் தூண்டி விட்ட பௌத்த பிக்குகளை கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment