கண்டி, திகன சம்பவத்தின் முழு விபரம்

கண்டி -– தெல்தெனிய, திகன   பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில்  இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள், வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.பெரும்பான்மை இன குழுவினரின் இந்த நடவடிக்கை காரணமாக திகன மஜ்ஜித்துல் நூர் ஜும் ஆப் பள்ளிவாசல் மற்றும் கெங்கல்ல ஜும்ஆ பள்ளிவாசல் என்பன பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள், ஆறு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளையடுத்து கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும்  நேற்று பிற்பகல் 3.15 முதல் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைகள் பரவாமல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கிலேயே ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி, தெல்தெனிய பொலிஸ் பிரிவில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கலகமடக்கும் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன் பிரதேசத்தின் பதற்ற நிலையை நீக்கி வன்முறைகள் பரவுவதை தவிர்த்து அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவை அமுல் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் கலகமடக்கும் பிரிவினரையும்,  பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் மீறி திகன, கெங்கல்ல மற்றும் தெல்தெனியவில் வன்முறைகள் பரவிய நிலையில், கண்டி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்கநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய இராணுவத்தை உதவிக்கு அழைத்த நிலையில் தற்போது இராணுவமும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  மத்திய மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.எச். டயஸின் நேரடி வழி நடத்தலில் நேற்று மாலை சுமார் 100 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும்  மேலதிக துருப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கேசரியிடம் தெரிவித்தார்.
 கண்டிதெல்தெனிய, திகன பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக நகர பகுதியில் வர்த்தக நிலையங்களும் தாக்குதலுக்குள்ளாகின.  திகன மஜ்ஜித்துல் நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கெங்கல்ல பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  வன்முறைகளையடுத்து நேற்று பிற்பகல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வன்முறைகள் மெல்ல நகர்ந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 நடந்தது என்ன?
 கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி லொறி ஒன்று பின்னோக்கி செலுத்தப்பட்டபோது  பின்னால் நின்ற முச்சக்கர வண்டியின் பக்கக் கண்ணாடியில் மோதி சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பவத்தின்போதே லொறி சாரதியினால் முச்சக்கர வண்டியில் இருந்தோரிடம் நட்ட ஈடாக குறிப்பிட்ட தொகை பணம் செலுத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
 எனினும் குறித்த லொறி சாரதி (பெரும்பான்மை இளைஞன்) அம்பால பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கையில், அவரை பின்தொடர்ந்து  முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று சென்றுள்ளது. அவர்கள்  கண்டி - திகன பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகில் வைத்து லொறியை மடக்கி குறித்த சாரதியை லொறியில் இருந்து இறக்கி அவரை தாக்கியுள்ளனர். தலைக்கவசங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இருந்த கதிரைகள் உள்ளிட்டவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த சாரதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
 இந் நிலையில் சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் சாரதியைத் தாக்கியதாக கூறப்படும் 4 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். குறித்த நால்வரும் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தி யட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழப்பு
 இதனிடையே கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.குமாரசிங்க  (41 வயது)  என்ற லொறி சாரதி கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 குறித்த சாரதி உயிரிழந்தமை தொடர்பிலான தகவல் பிரதேசமெங்கும் அதற்கான காரணத்துடன் பரவவே, பெரும்பான்மை இன குழுவினர் ஆத்திரமடைந்திருந்தனர். இந்த தகவலை சமூக வலைத்தளங்களூடாக இனவாத நோக்குடன் குறிப்பிட்ட குழுக்கள் பரப்பியுள்ளன.
வன்முறைகள் ஆரம்பம்
 இந் நிலையில் மூன்றாம் திகதி சனிக்கிழமை முதல்  திகன நகரில் பதற்றமான சூழல்  நிலவிய நிலையில் நேற்று முன்தினம் 4 ஆம் திகதி ஞாயிறன்று அந்த பதற்ற சூழல் வன்முறையாக வெடித்தது.
 முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரை
அதன் பிரதிபலனாக  மத்திய கண்டி எனக் கூறப்படும் திகன, - மொரகஹமுல்ல சந்தியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பலசரக்கு கடைக்கு நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில் பெரும்பான்மை இனக்கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது. இதனால் குறித்த கடை முற்றாக சேதமடைந்துள்ளது.
 உடன் செயற்பட்ட பொலிஸார்
 இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார்  முஸ்லிம்களுக்கு சொந்தமான குறித்த வர்த்தக நிலையம் மீது தீ வைத்த பெரும்பான்மை இனக் கும்பலைச் சேர்ந்த 24 பேரை நேற்று --- முன்தினம் இரவோடிரவாக கைது செய்தனர்.
கைது செய்தோரை விடுவிக்கக் கோரி பொலிஸாருக்கு அழுத்தம்
 இந் நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த 24 இளைஞர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தெல்தெனிய நகரில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒன்று கூடினர்.
இறுதி நிகழ்வும், நீதிமன்ற தடையும்
 இதனிடையே உயிரிழந்த பெரும்பான்மை இன இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்ற நிலையில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
 மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்கநாயக்க ஆகியோரின் உத்தரவு, நேரடி மேற்பார்வைக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசேட பாதுகாப்பு நிலைமைகள் அமுல் செய்யப்பட்டன. பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கவும் திகன நகருக்குள் பூதவுடலை ஊர்வலமாக கொண்டுவருவதை தடுக்கவும் நீதிமன்ற உத்தரவை யும் பொலிஸார் பெற்றனர்.
 வன்முறை சந்தேகநபர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
  எவ்வாறாயினும் நீதிமன்ற உத்தரவையும் மீறி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உள்ளிட்ட 50 இற்கும் அதிகமான தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்கள் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் திகன நகருக்குள் நுழைந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 குறிப்பாக தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கடை எரிப்பு சந்தேகநபர்கள் 24 பேரையும் விடுவிக்கக் கோரி அவர்கள் இந்த முற்றுகை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இரு நாட்களாக போக்குவரத்து பாதிப்பு
 இதனிடையே திகன பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை காரணமாக கடந்த இரு நாட்களாக கண்டி – - மஹியங்கனை பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கிழக்கில் இருந்து மஹியங்கனை, கண்டி ஊடாக கொழும்பு நோக்கிய போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. பொது பயணிகள் பஸ் சேவைகள் பலவும் இந்த பதற்ற நிலைமை காரணமாக இரத்துச்செய்யப்பட்டன.
கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்
நேற்று பெரும்பான்மை இனக்குழுவினர் தெல் தெனிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் திகன நகரிலும் வன்முறையை தூண்டும் வண்ணம் நடந்துகொண்ட நிலையில் அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல், நீர்த்தாரை பிரயோகத்தை பயன்படுத்தினர்.
திகன நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்; பள்ளிவாசலுக்கும் தீ வைப்பு
 இந் நிலையில் நகரின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகத்தை முன்னெடுக்கவே, திகன நகரில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பல வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் திகன ஜும்ஆ பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் வளாகத்திலும் தீவைக்கப்பட்டது. அத்துடன் கெங்கல்ல பள்ளி வாசல் மீதும் சில குடியிருப்புக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திகனயில் ஐந்து கடைகளும் கெங்கல்லயில் ஒரு கடையும் தாக்குதலுக்குள்ளானதாக அறிய முடிகிறது.
கலவரம் பரவுவதை தடுக்க ஊரடங்கு
 இந் நிலையில் வன்முறைகள் திகனைக்கு அப்பாலும் பரவும் அபாயம் காணப்பட்ட நிலையில், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக உடனடியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று  பிற்பகல் 3.15 முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் வண்ணம் இந்த ஊரடங்கு அமுல் செய்யப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த வன்முறைகள் ஏனைய பகுதிகளை நோக்கி பரவுவதை தடுக்கும் முகமாக, கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதற்கும் செல்லுபடியாகும் வண்ணம் இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 ஊரடங்கின் போதும் தாக்குதல்கள்
 நேற்று பிற்பகல் 3.15 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும் நகர பகுதி தவிர்த்து, குடியிருப்பு பகுதிகளில் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கை தொடர்ந்து,  நகரில் இருந்து உட்பகுதியில் அமைந்துள்ள பல முஸ்லிம் குடியிருப்புக்கள் மீது கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பலரும் கேசரிக்கு தெரிவித்தனர்.
எனினும் நேற்று மாலை ஆறு மணி ஆகும் போது தெல்தெனிய திகன, கெங்கல்ல உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முற்றாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் வன்முறைகளும் தவிர்க்கப்பட்டு அமைதி நிலைமை நிலவியது.
(எம்.எப்.எம்.பஸீர்)



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top