உள்நாட்டு கைத்தொழில் துறையில்
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடமளிக்க முடியாது

உள்நாட்டு கைத்தொழில் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
தேசிய கைத்தொழில் துறையில் எதிர்கால நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய கைத்தொழில் துறையினர் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தேசிய கைத்தொழில் துறை பலமடையும்போதே நாட்டில் சரியானதொரு பொருளாதாரக் கொள்கை கட்டியெழுப்பப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி;, தேசிய கைத்தொழிலை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன் பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கும்போது தேசிய கைத்தொழில்களை பலப்படுத்துதல் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய கைத்தொழில்களை பாதுகாத்து அவற்றின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உள்நாட்டு பால்மா உற்பத்தி, தேசிய பிஸ்கட் உற்பத்தி மற்றும் வாகன உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் தேசிய ஆயுர்வேத மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிலைய வலையமைப்பிற்கு இலங்கையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட அனுமதியளிப்பதனால் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் தேசிய கைத்தொழில்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு வெளிநாட்டு கைத்தொழில்களுக்கு இடமளிக்ககூடாது என்று ஜனாதிபதி தேசிய முதலீட்டு சபைக்கு பணிப்புரை விடுத்தார்.
அதிகரித்த வங்கி வட்டி வீதத்தினால் தேசியக் கைத்தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அரச வங்கிகளினூடாக சலுகை வழங்கும் வேலைத் திட்டமொன்றினை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அரச துறையின் பங்களிப்பினை போன்றே தனியார் துறையினரின் பங்களிப்பும் அத்தியவசியமாகும் என ஜனாதிபதி இக்கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.
அதேபோல இன்றைய தினம் தேசிய கைத்தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட சகல பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி அவற்றிற்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய தீர்வுகளை கண்டறிவதற்கு அது தொடர்பான சகல அரச நிறுவனங்களினதும் பிரதிநிதிகளையும் தேசிய வர்த்தகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
  
இந்த நிகழ்வில் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, றிஷாட் பதியுதீன், லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கைத்தொழில் வாணிப அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக, அபிவிருத்தி உபாய மார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர் சாந்தனி விஜேயவர்தன. அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண உள்ளிட்ட அதிகாரிகள்; பங்குபற்றினர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top