இந்தோனேசியாவில் பூகம்பம்
10 பேர் பலி 40 பேர் காயம்
இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் இன்று (ஞாயிறு,
29-7-18) பூகம்பம் தாக்கியதில் 10 பேர் பலியாக 40 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலிக்கு அடுத்தபடியாக பிரபலமான சுற்றுலாத் தலமாகும் லாம்போக் தீவு. இதில் பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் மவுண்ட் ரிஞ்சனியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் இது 6.4 என்று பதிவானாலும் பூமிக்கு அடியில் ஆழம் குறைவாக இந்த பூகம்பம் ஏற்பட்டதால் சேதம் கொஞ்சம் அதிகமாகியுள்ளது.
மேலும் கட்டிடங்களில் விரிசல்கள் தோன்றியுள்ளன, பெரிய கட்டிடங்களும் ஆடின. பரவலாக இந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 7 கிமீ ஆழத்திலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டதால் பாலி தீவு வரை இதன் தாக்கம் இருந்தது, ஆனால் பாலியில் உயிர்ச்சேதம் பொருட்சேதம் எதுவும் இல்லை.
பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது, தரவுகள் இன்னமும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ரிஞ்சனி மலையில் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் பாதிப்புகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
10 விநாடிகள் நீடித்த இந்தப் பூகம்பத்தினால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் லாம்போக் தீவில் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் உண்டு, மலைகள், கடற்கரைகள் என்று இயற்கை எழில் மின்னும் இப்பகுதியில் இந்த பூகம்பம் பெரிய பீதியைக் கிளப்பியுள்ளது.
இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியாகும் இங்கு பூகம்பங்கள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன.
0 comments:
Post a Comment