சாய்ந்தமருது தபாலகத்தின் அவல நிலை
22 வருடங்களுக்கு முன் மர்ஹும் அஷ்ரப்
திறந்து வைத்த நிலையிலிருந்து எதுவித மாற்றமுமில்லை
சாய்ந்தமருது பிரதான தபாலகம் பல குறைபாடுகளுடன் இயங்கிவருவதாக
அறிவிக்கப்படுகின்றது.
இத் தபாலகம் தொடர்ந்து தரம் 11 தரத்தில் இருந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் இத்
தபாலகத்தை தரம் 1 க்கு உயர்த்துவதற்கு அரசியல்வாதிகள் எவராலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத் தபாலகத்தில் போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழும்
மக்களுக்கு வரும் பல நூற்றுக்கணக்கான கடிதங்களை இத் தபாலகத்தில் கடமையாற்றும் 3 உத்தியோகத்தர்களே
வீடுவீடாகச் சென்று விநியோகிக்க வேண்டியிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது பிரதான தபாலகம் ஒரு வீடு போன்று அமைக்கப்பட்டிருப்பதால்
தபாலகம் எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்கு கவர்ச்சியான பெயர்ப்பலகை
இத்தபாலகத்திற்கு முன்னால் எவ்விடத்திலும் வைக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து
சாய்ந்தமருது வருபவர்கள் சாய்ந்தமருதில் தபாலகம் எங்கிருக்கின்றது என்று தேடி அலையவேண்டியுள்ளது.
இத்தபாலத்திற்கு முன் வாகன தரிப்பிடம் ஒன்று முறையாக அமைக்கப்படவில்லை.
இதன் முன் சுவர்கள் கவர்ச்சியாக அமைக்கப்பட்டு வடிவமைக்கப்படவில்லை.
இத்தபாகத்திற்கு என பின்புறத்தில் ஊழியர்களுக்கான
விடுதி ஒன்று அமைக்கப்பட்டு அது கடந்த பல வருடங்களாக அப்படியே மூடிக்கிடக்கின்றது.
சாய்ந்தமருது பிரதான தபாலகம் கடந்த 22 வருடங்களுக்கு முன் அதாவது 1996 ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் 04 ஆம் திகதி மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் திறந்து
வைக்கப்பட்ட போது எவ்வாறான நிலையில் இருந்ததோ அதே நிலையில் எதுவித
முன்னேற்றமுமின்றி அப்படியே இருந்து கொண்டிருப்பது குறித்து இப்பிரதேச மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment