பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
இம்ரான் கான் - நவாஸ் ஷெரீப் கட்சிகள் இடையே கடும் போட்டி

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று 25 ஆம் திகதி (புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதனால் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 25 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே ஆட்சியை கைப்பற்ற ஒரு கட்சியோ அதன் கூட்டணியோ 172 இடங்களில் வென்றாகவேண்டும்.
272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று(புதன்கிழமை) தேர்தல் நடக்கிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

வாக்குப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 4 லட்சம் பொலிஸாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் - இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக களம் காண்கின்றன.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கே அதிக அதிகாரம் உண்டு என்றாலும், ராணுவமும் ஆட்சியில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அவருடைய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க ராணுவம் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால்தான் வாக்குச்சாவடிகள் பாதுகாப்புக்கு ராணுவத்தை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் தேர்தல் கமிஷனும், ராணுவமும் மறுத்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இம்ரான் கானின் தெஹ்ரீக் -இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தான் மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து உள்ளது. இதனால் அவருடைய கட்சிக்கும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்றாவது இடத்தில்தான் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளது.
அண்மையில் எடுக்கப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் ஒன்றில், இம்ரான்கான் கட்சிக்கு 30 சதவீத ஆதரவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு 27 சதவீத ஆதரவும் மற்றொரு கருத்து கணிப்பில், நவாஸ் ஷெரீப்பின் கட்சிக்கு 26 சதவீதமும், இம்ரான்கான் கட்சிக்கு 25 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையக் கூடிய வாய்ப்பும் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் ஆட்சி அமைப்பதில் சிறு சிறு கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.
இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் குண்டுவெடித்து 151 பேர் பலியானதால் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top