வடக்கில் இருபதாயிரம் பேருக்கு
தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக
அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கிலே ஆகக்குறைந்தது  இருபதாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடியவாறு கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களையும் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக பிரதமதர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில்  முதமைச்சர் விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ் எழுச்சி விழாவில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
பிரதமர் தலைமையில் தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன் உட்பட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையடுத்து, மாகாண முதலமைச்சரினதும் மாகாண அமைச்சரவையினதும் விருப்பத்துடனும் ஒத்துழைப்புடனும் இந்த பாரிய தொழில் முயற்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
யுத்த காலத்தில் நமது மண்ணில் வாழ முடியாத சூழ்நிலையால் அச்சம் காரணமாக  வெளியேறி வெளிநாடுகளில்  வாழும் வியாபார சிந்தனையும் அக்கறையும் கொண்டோரை இந்த திட்டத்தில் உள்ளீர்த்து அவர்களை முதலீட்டு முயற்சிகளில் ஈடுபடச்செய்து இது வலுப்படுத்தப்படும்
வடக்கில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் குறிப்பிட்ட கைத்தொழில் துறைத் திட்டம் தொடர்பில் இன்று (22) காலை முதலமைச்சருடனும் பேசி இருக்கின்றேன். விரைவில் அவரைச்; சந்தித்து இது தொடர்பில் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்போம்.
ஏனைய மாகாணங்களைப் போலன்றி இந்த மாவட்டத்தில் வித்தியாசமான முறையில் குறைந்த வரிச்சலுகையுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.
இந்த அரசும் விசேடமாக ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மைச் சமூகங்களான தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் 100 சதவீதமான வாக்குகளினால் உருவாக்கப்பட்டவர்கள். எனவே எஞ்சியுள்ள ஆட்சிக் காலங்களில் அவர்களைப் பயன்படுத்தி நமது உச்ச அளவிலான தேவைகளை பெற்றுக்கொள்ளவேண்டியது அந்த மக்களின் பிரதிநிதிகளையே சார்கின்றது.
எல்லாவற்றையும் இழந்து, அழிந்த இந்தப் பூமியை வளமுள்ளதாக்க வேண்டியதன் கடப்பாடு நமக்குண்டு. பல்வேறு கட்சிகளிலும் வெ.வ்வேறு சின்னங்களிலும் நாம் அரசியல் செய்து கொண்டிருந்தாலும் மக்களின் வாழ்வு என்று வரும் போது பேதங்களையும் வேறுபாடுகளையும் மறந்து, ஒன்றுபட்டு உயிரோட்டமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்பவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் அனைத்து அரசியல்வாதிக்கும் தர்மீகப்பொறுப்பும் கடப்பாடும் உண்டு.
எனது அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபை, நெடா ஆகியன கைத்தொழில் துறையில் ஈடுபட விரும்புவோருக்கும் சிறிய வியாபாரங்களில் ஆர்வமுள்ளோருக்கும் உதவியளிக்கின்றது. அந்த வகையில் இவர்களுக்கான பயிற்சி, இயந்திராதிகளை வழங்கி வியாபார முயற்சிகளை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கின்றது. அவ்வாறான ஒரு நிகழ்வாகவே இன்றைய நாள் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்றே கைத்தொழில் வர்த்தக அமைச்சு இதை நடைமுறைப்படுத்துகின்றது. இத்திட்டத்தை எதிர்காலத்தில் விரிவுபடுத்தி அனைவரது ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நாம் கோரி நிற்கின்றோம். இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top