மெரினாவில்
இடம் ஒதுக்க முடியாது...
தி.மு.க.
கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு!
கோபாலபுரம், சிஐடி
காலனி இல்லத்தில்
இன்று இரவு இறுதி மரியாதை
காவேரி மருத்துவமனையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில்
கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. கோபாலபுரம்,
சி.ஐ.டி. காலனி
இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்கு கருணாநிதியின் உடல் வைக்கப்படுகிறது.
அதன்பின்னர் அதிகாலை கருணாநிதியின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன்
விடுத்துள்ள அறிக்கையில், "உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத்
தலைவர் கலைஞர் அவர்களின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி
மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு
வரப்பட்டு கழக உடன்பிறப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி
தலைவர்களுக்கும் இறுதிவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழகத்தினரும்,
பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு ஒத்துழைப்பு
நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில்
உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய தி.மு.க. அனுமதி கோரியிருந்தது. தமிழக
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் நேரில் சந்தித்த்து
கோரினர். மேலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. துணைப்
பொதுச்செயலாளர் துரைமுருகன், "கலைஞர் உடலை அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும்
என்பது தான் தலைவரின் விருப்பமும், தி.மு.க.வினர் அனைவரின் விருப்பமும். இதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற
நாங்கள் மற்றும் தலைவர் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து
இந்த கோரிக்கையை வைத்தோம். அவர்கள் 'பார்ப்போம்' என அவரிடம் பேசி அனுப்பி விட்டார்கள். மீண்டும் முறைப்படி கேட்கவேண்டும்
என்றும் செயல் தலைவர் கையொப்பமிட்டு முதல்வருக்கு வேண்டுகோள் மனுவை நானும்,
பொன்முடி, நேரு ஆகியோர் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமையைச் சந்தித்து
தளபதி சார்பில் மனுவை அளித்தோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள்.
முழுமையான பதிலை தரவில்லை. எதிர்பார்த்திருக்கிறோம்," எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில், "காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும்,
அவ்விடத்தை ஒதுக்கீடு
செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர்
நினைவகத்திற்கு அருகே, அன்னாரை
நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக
இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்," எனத் தெரிவித்துள்ளார். மெரினாவில்
கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது தற்போதைய சூழலில் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து சிறிது
நேரத்தில் அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு
செல்லப்படுகிறது. தொடர்ந்து சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்துக்கும் கருணாநிதியின்
உடல் கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து நாளை
காலை 11.00 மணி முதல்
பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர்
நாளை சென்னை வருகிறார்கள்.
கருணாநிதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் கலைஞர்
இல்லத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கதறி அழுதனர். இந்த
அறிவிப்பையடுத்து கோபாலபுரம் கலைஞர்கள் இல்லத்தில் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர்.
80 ஆண்டுக்கால
அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் எனப் பல சாதனைகளைப்
படைத்த கருணாநிதி, 94 வயது வரை
நிறைவாழ்வு வாழ்ந்து 95வது வயதில் இன்று
மறைந்திருக்கிறார். இலக்கியம், சினிமா, அரசியல் எனப்
பல்துறை வல்லமை கொண்ட தலைவர் எனக் கடந்த நூற்றாண்டில் தமிழக அரசியலில் தவிர்க்க
முடியாத ஆளுமையாக, மக்கள் மத்தியில்
மாபெரும் சக்தி பெற்றத் தலைவராக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால்
உயிரிழந்துவிட்டதாகக் காவேரி மருத்துவமனை தரப்பில் அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த
ஓராண்டுக்கும் மேலாகக் கருணாநிதி ஓய்வில் இருந்துவந்தார். சென்னை
ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்களால் அவருக்கு கோபாலபுரம்
இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே
அவர், காவேரி மருத்துவமனையில்
கடந்த மாதம் 28-ம் திகதி
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து
வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தொடர்ச்சியாக
அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை 7 அறிக்கைகள் மருத்துவமனை சார்பில்
வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக
இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கருணாநிதி உயிரிழந்துவிட்டதாகக் காவேரி மருத்துவமனை
தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தீவிர
சிகிச்சை அளித்தும், உடல்நிலை
ஒத்துழைக்காததால் இன்று (7.8.2018) மாலை 6.10 மணியளவில்
கருணாநிதியின் உயிர் பிரிந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை
இழந்துவிட்டோம். உலகத் தமிழர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின்
துக்கத்தில் பங்கெடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment