கருணாநிதியின் ‘பஞ்ச்’ வசனங்கள்
* சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே’ என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, ‘கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?’ என்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.என்.அனந்தநாயகி கேட்டார். அப்போது அவர், ‘கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?’ என்றார்.
* ‘இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு’ என்று அக்டோபர் 13, 1957ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கருணாநிதி பேசினார்.
* ‘என் மூளையே தனக்கு டைரி’ என்று கூறுபவர் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர்.
* முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தவர் கருணாநிதி. இதுெதாடர்பாக, ‘அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்’ என்றார்.
* கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. ‘அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்’ என்று கருணாநிதி தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.
* ஒரு முறை சட்டசபையில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ‘அயிரை மீன் அளவுக்குப் பேசவும்’ என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.
* எம்ஜிஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சித்தார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. ‘எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்’ என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார். அதன்பின் எழுந்த கருணாநிதி, ‘இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே’ என்றார்.
* டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி’ என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, ‘அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்’ என்று பதில் அளித்தார்.
* ‘மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று, கருணாநிதி அடிக்கடி மேற்கோள்காட்டிய வரிகளில் ஒன்று.
* வாஜ்பாய் குறித்து கருணாநிதியிடம் கேட்டதற்கு, ‘மேன் ஈஸ் கிரேட் (வாஜ்பாய்), பட் ராங் பார்ட்டி’ என்று கூறினார்.
0 comments:
Post a Comment