கல்முனையில் பிரேமதாஸவின் வாக்குறுதியும்
மைத்திரி, ரணிலின்  வாக்குறுதிகளும்


1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை வளவில் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ பெரும் திரளான மக்களைக் கண்டு சந்தோசத்தின் காரணமாக தான் இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் முதன் முதலாக கல்முனைக்கு விஜயம் செய்து இங்குள்ள மக்களைச் சந்திப்பேன் என்ற வாக்குறுதி ஒன்றை மேடையில் வைத்து மக்களுக்கு வழங்கினார். அன்னார் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியும் பெற்றார், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி கல்முனைக்கும் விஜயம் செய்தார். கல்முனை அபிவிருத்திக்கு மர்ஹும் .ஆர்.மன்சூருக்கு தொடர்ந்து உதவினார்.
இது அன்று ஆனால், இன்று!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி கல்முனை கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து தனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற சனத்திரளை பார்க்கவில்லை எனத் தெரிவித்ததுடன் அவர் சென்ற இடமெல்லாம் கல்முனையில் கூடிய மக்கள் கூட்டத்தை சிலாகித்துப் பேசியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வீதத்தில் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் பாரிய பங்களிப்பு செய்துள்ள கல்முனைத் தொகுதிக்கு அவர் இன்னும் இப்பிரதேச அபிவிருத்தி  தொடர்பாக ஒரு தடவையேனும் விஜயம் செய்யாதிருப்பது இப்பகுதி மக்களுக்குமிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளில் தொகுதி ரீதியாக கல்முனைத் தொகுதியிலேயே அதி கூடிய வாக்கு வீதமான 89.81% பதிவாகியிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குவதாகவும் ஜனாதிபதியும் தேர்தல் காலத்தில் அமைச்சர் தயாகமகே உட்பட பலராலும் வாக்குறுதி  வழங்கப்பட்ருந்தது. அந்த  வாக்குறுதி நிறைவேற்றப்படவுமில்லை. கவனத்தில் எடுக்கப்படுவதாகவும் இல்லை.
இது போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக்கென தனியான அதிகார சபை ஒன்றை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார் அதுபற்றி எந்த நடவடிக்கையும் இல்லை.
மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பு விடயத்தில் இந்த நல்லாட்சியில் எவரும் பேசுவதாக இல்லை அம்பாறைக் கரையோரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்கள் நன்மை அடையக் கூடிய எந்த ஒரு பாரிய அபிவிருத்தி திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படுவதாகவும் இல்லை. இதுகுறித்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.  
அன்று, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்திருந்த மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்ததனால் பிரதேசத்தின் அபிவிருத்தியில் அக்கறை காட்டி துரிதமாக அபிவிருதிகளைச் செய்து கொண்டிருந்தார்.
இன்று, கிழக்கு மாகாணத்திற்குரிய அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இல்லாமல் வெளி  மாகாணத்தவராக இருப்பதனால் கிழக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் அவரால் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இல்லாதவர்போல் இருந்துவிட்டு தேர்தல் ஒன்று நெருங்கும்போது அரசாங்கத்தை பழி சொல்லி தப்பிக்க முன்வருவார் என விடயம் புரிந்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டுத் தலைவர்கள் கல்முனை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அதனைப் பின் தொடர்ந்து மக்களுக்கு  செய்து கொடுப்பதற்கும் இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள்  உறைப்பாகக் கதைக்கக்கூடிய நிலையில் இப்போதைக்கு இல்லை, ஏனெனில் அவர்கள் அமைச்சுப் பதவிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் ஒன்று வருமானால் இவர்களின் வாய் வீச்சுக்களையும் சண்டித்தனங்களையும் தேர்தல் மேடைகளில் கண்டு கொள்ளமுடியும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top