நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில்
முஸ்லிம் அரசியல்வாதிகளின்
புனித உம்ரா கடமை
தற்போதைய நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் புனித உம்ரா கடமையை
நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக புனித
மக்காவுக்கு சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில் இது ஒரு புனிதமான கடமை எல்லாம் வல்ல அல்லாஹ் இக்கடமையை
நிறைவேற்ற எல்லோருக்கும் உதவி செய்யவேண்டும் எனப் பிராத்திப்போம்.
இன்று எமது இலங்கை நாட்டில் ஒரு நெருக்கடியான அரசியல் சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் நாட்டிற்குள் இருந்து
உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் அனுபவசாலிகள் மற்றும் மக்களின் கருத்துக்களைப் பெற்று
மசூறா அடிப்படையில் முடிவுகளை எடுக்க முற்பட வேண்டும்.
ஏற்கனவே இப்படி மசூறா அடிப்படையில் இறுதி முடிவு ஒன்றுக்கு வந்துவிட்டால்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் மக்களோடு மக்களாக முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள்
இருந்து நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக முகம்
கொடுப்பதற்கும் முடிவுகளை எடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் இதற்கு தீர்வுகாண புனித உம்ரா
கடமையை நிறைவேற்றிவிட்டு மக்களுக்காகவும் நாட்டின் சீரான ஆட்சிக்கு வழியமைக்க எல்லாம்
வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் ஒன்றாக மக்கா
செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.
எமது முஸ்லிம் சமூகத்திற்குள் கண்ணியமான உலமாக்கள், மேன்மையான
இறை பக்தர்கள் என எத்தனயோ பேர் உள்ளனர். அவர்களை பிரதேசவாரியாகத் தெரிவு செய்து நாட்டிலுள்ள
முஸ்லிம் மக்களுக்காகவும் நாட்டில் சீரான ஆட்சி ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்வதற்கு மக்காவுக்கு உம்ரா கடமைக்கு அனுப்பியிருக்க முடியும்.
ஆனால் இந்த முறை சகல உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து உம்ராவுக்குச்
செல்வதுதான் ஆச்சிரியமான விடயமாக முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டபோதும்
அவர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டபோதும் உம்ரா பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை.
முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்பட்ட சூழ்நிலைகளிலும் இப்படி ஒன்றாக மக்கா
சென்று உம்ரா செய்துவிட்டு துஆச் செய்ய வேண்டும் என்றும் சிந்திக்கவில்லை.
எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும்
சிக்கல்கள் தோன்றும் போதுதான் புனித உம்ரா கடமை என்ற பேரில் மக்காவுக்குச் செல்வதை
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் அறிந்த விடயமாக இருந்து கொண்டிருக்கிறது.
முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை கோழி
தனது குஞ்சுகளை அடைகாப்பது போன்று ஒன்றாக ஒரு இடத்தில் வைத்திருந்து தங்கள் கட்சியின்
பலத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதன் நிமிர்த்தம் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை சொகுசு ஹொட்டல்களிலும்
ஒன்றாக வைத்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
எனவேதான், எமது முஸ்லிம் சமூகத்திற்குள் கண்ணியமான
உலமாக்கள், மேன்மையான இறை பக்தர்கள் எத்தனயோ பேர் உள்ளனர். அவர்களை பிரதேசவாரியாகத்
தெரிவு செய்து நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்காகவும் நாட்டில் சீரான ஆட்சி ஏற்பட எல்லாம்
வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கு உம்ரா கடமையை நிறைவேற்றவும் துஆ செய்யவும் மக்காவுக்கு அனுப்பியிருக்க முடியும்
என எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றாக உம்ரா கடமைக்கு மக்கா சென்றது குறித்து மக்கள்
கருத்துக்களை வெளியிடுகின்றனர்.


0 comments:
Post a Comment