ஜனாதிபதியைச் சந்தித்தார் சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேவிபி தலைவர்களுடன் நேற்று பிற்பகல் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, ஜனாதிபதியை இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை வரும் 14ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி முடிவெடுத்த நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இறுதி சமரச முயற்சியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய பிரதமர் நியமனம் மற்றும் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

"புதிய பிரதமர் நியமனம், நாடாளுமன்றம் ஒத்திவைப்பு ஆகியவை சட்டத்துக்கு முரணானவை. இவை ஜனநாயகத்துக்கு விரோதமானவை. இவற்றை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்" என்று இரா. சம்பந்தன், ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.

அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாகக் கூட்டுமாறும் சம்பந்தன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

தான் அரசமைப்புக்கு உட்பட்டே அனைத்தையும் செய்தார் என ஜனாதிபதி இதன்போது சம்பந்தனிடம் கூறியுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top