இந்தியாவுக்கும் எனக்கும்
சண்டையை மூட்டிவிட முயன்றார் ரணில்
–ஜனாதிபதி குற்றச்சாட்டு
தனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று, மைத்திரி- மஹிந்த அணிகள் இணைந்து நடத்திய ‘ஜன மகிமய’ என்ற பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
”புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சரவையில் இந்தியா தொடர்பாகப் பேசப்பட்டதாக, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் சிலர் ஊடகங்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்களை கசிய விட்டனர்.
அதன் விளைவாக, என்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால் இந்தியாவின் ‘றோ’ இருப்பதாக, ஜனாதிபதி கூறினார் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நான் அதனை மறுத்து, இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த செய்திகள் பொய்யானவை என்று உறுதியளித்தேன்.
மஹிந்த ராஜபக்ஸவின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றும், நல்ல உறவுகளைப் பேணும்.
2015இல் உங்களைப் பதவியில் அமர்த்திய ஐதேகவினரின் எதிர்பார்ப்புகளை மோசம் செய்யும் வகையில் மஹிந்த ராஜபக்ஸவை ஏன் பிரதமர் ஆக்கினீர்கள் என்று என்னைச் சந்தித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
எட்டு மாதங்களுக்கு முன்னர், சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவுடன் என்னால் பணியாற்ற முடியவில்லை. அதனால், பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளுங்கள் என்று பல நாட்கள் கேட்டுக் கொண்டேன். எனினும் அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், சஜித் பிரேமதாசவை அணுகினேன். அவருக்கு பிரதமர் பதவியை அளிப்பதாக கூறினேன். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக தன்னால் செயற்பட முடியாது என்று அவரும்பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் தனிநபர்களில் மட்டும் மாற்றத்தை கொண்டு வரவில்லை. மாறாக வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காகவும், இலங்கையின் கலாசாரத்துக்கு எதிரான கலாசாரங்களை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு அரசியல் வேலைத்திட்டமும் ஆகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை எடுத்தது “வண்ணத்துப்பூச்சி குழு”வே தவிர, அமைச்சரவை அல்ல.
புதிய அரசாங்கத்துக்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து விட்டது. சபாநாயகர் கரு ஜெயசூரிய என்னுடன் ஒத்துழைக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவை நான் சட்டரீதியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளேன். இந்த முடிவை சபாநாயகர் மதிக்க வேண்டும்.
நான் ஒருபோதும் தனியாளாக முடிவுகளை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசித்தே முடிவெடுத்தேன். பிரதமர் பதவிநீக்கமும், மஹிந்தவின் நியமனமும், சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டன. அதில் யாருக்காவது சந்தேகம் இருப்பின் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
மஹிந்த ராஜபக்ஸ பிரதமரான பின்னர் மகாநாயக்கர்களையும், கர்தினாலையும், சந்தித்தார் தலதா மாளிகையிலும் ஜெயசிறி மாபோதியிலும் வழிபாடு செய்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களை வணக்கினார்.
நான் எடுத்து முடிவில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment