ஐதேகவுக்கும், அனைத்துலகத்துக்கும் பலம் காட்ட
கொழும்பில் இன்று ஜன மகிமய
அக்கரைப்பற்றிலிருந்தும் பஸ்களில் ஆதரவாளர்கள்
‘ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்தவுள்ளது. பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேரணியில், நாடு முழுவதிலும்
இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர்.
இதனை முன்னிட்டு, 1500 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும், நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தியும் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வாரம் பாரிய பேரணி ஒன்றை கொழும்பில் நடத்தியது.
அதற்குப் போட்டியாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்டி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு அழுத்தங்களைக் கொடுக்கும் அனைத்துலக சமூகத்துக்கு, மக்களின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலுமே, ஜன மகிமய என்ற பெயரில் இன்றைய பேரணி நடத்தப்படவுள்ளது.
இந்தப் பேரணியில் தமது ஆதரவாளர்களை கொண்டு வருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டு எதிரணியும் தமது அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளன.
அக்கரைப்பற்று, சம்மாந்துறையிலிருந்தும் பஸ்களில் ஆதரவாளர்கள் கொழும்புக்கு
கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
இந்தப் பேரணியில் ஜனாதிபதியும் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும், கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment