கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை
தரமுயர்த்தக்கோரி பொலிஸாரின்
தடைகளையும் மீறி நடாத்தப்பட்ட
நடைபவனி இடைநிறுத்தம்
கல்முனை
வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி பொலிஸாரின் தடையினையும் மீறி இன்று
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட நடைபவனி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக
அறிவிக்கப்படுகின்றது.
கல்முனை
வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி இன்று மட்டக்களப்பில் இருந்து
அம்பாறைக்கு மாபெரும் நடை பவனியொன்றை
நடாத்துவத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பு ஏற்பாட்டினை
செய்திருந்தது.
எனினும்
காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி
பொலிஸார் இனமுரண்பாட்டினைதோற்றுவிக்கும் என்னும் அடிப்படையில் குறித்த
நடைபவனிக்கான தடையுத்தரவினை நீதிமன்றம் ஊடாக பெற்றிருந்தது.
எனினும்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து குறித்த நடைபவனியை
நடாத்துவதற்கு தமிழ் உணர்வாளர் அமைப்பினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த
பேரணியானது தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் தலைமையில் ஆரம்பிக்கவிருந்த
நிலையில் அங்குவந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் அதற்கான தடையினையும் நீதிமன்றம் ஊடாக
விதித்து பேரணிக்கு தடைவிதித்தனர்.
எனினும்
அங்கு வருகைதந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் முன்னாள் வடமாகாண
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பேரணியை தொடர்ந்து
முன்னெடுத்தனர்.
இதன்போது
பொலிஸார் பேரணியை நடாத்த வேண்டாம் என்ற நீதிமன்றின் தடையுத்தரவினையும் மீறி
நடைபவனியானது கொக்கட்டிச்சோலை சந்திவரையில் சென்ற நிலையில் அங்கு கலகம் அடக்கும்
பொலிஸார் சகிதம் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு பேரணி தடுக்கப்பட்டது.
இதன்போது
பொலிஸாருக்கும் பேரணியில் பங்குகொண்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்
நடைபெற்றிருந்த சமயம் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில்
தகவல்கள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து நடைபவனி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
கல்முனை
தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் கோரிக்கையினை வலியுறுத்தி அமைதியான
முறையில் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் தவறான தகவல்கள் நீதிமன்றுக்கு
பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அவை தெளிவுபடுத்தப்பட்டு
மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்
கி.துரைராஜசிங்கம் இங்கு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment