கழிவு குழியில் விழுந்து
சுகாதார தொழிலாளிகள் நால்வர் உயிரிழப்பு

கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரித்து கொண்டிருந்த நகரசபையின் சுகாதார தொழிலாளிகள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று மதியம் ஒரு மணியளவில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிப்பதற்கு குழியினுள் நால்வர் இறங்கியுள்ளனர்.

இதன்போது ஒருவர் திடீரென மயக்கமுற்று குழியில் விழுந்துள்ளார். மற்றையவர் அவரை காப்பாற்ற முயன்ற போது ஏனைய இருவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களும் கழிவு குழிக்குள் விழுந்துள்ளனர். அங்கு கடமையில் இருந்த காவலாளியும், வாகனத்தின் சாரதியுமாக மூவர் பேர் அவர்களை வெளியில் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை என தெரியவருகிறது.

இதனையடுத்து கழிவு குழிக்குள் விழுந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சகாயமாதாபுரத்தினை சேர்ந்த செல்வராசா, வசந்தகுமார், சசிக்குமார், பூந்தோட்டத்தை சேர்ந்த சந்தனசாமி ஆகிய குடும்பஸ்தர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top