தெளஹீத் ஜமாஅத் அமைப்பின்
 மாவட்ட அமைப்பாளர் சியாம் எனும்
சந்தேக நபரது கல்முனை வீட்டில் சோதனை.

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகக் கருதப்படும் சியாம் என்பவர்  தங்கி இருந்ததாக கருதப்படும்  வாடகை வீடு ஒன்றை   அரச புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் தடயவியல் பொலிஸார்  இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை  கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம்   உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணைகளை அடுத்தே   மேற்படி தேடுதல்  நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணறு 2 மணித்தியாலங்களாக  இறைக்கப்பட்டு அதிலிருந்து பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

நேற்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 7 மணியளவில்  கல்முனை நகர மண்டபம் வீதியில் உள்ள  சந்தேக நபரது வீடு பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் செய்யப்பட்ட்து. இத்தேடுதலில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் யாவும் பொலிஸாரினால் எடுத்து செல்லப்பட்டன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதான இச் சந்தேகநபர்   வழங்கிய தகவலுக்கு அமைய ஏனைய நால்வரும் அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் வைத்து   கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுவதுடன்  நிந்தவூர் , சாய்ந்தமருது வொலிவேரியன் வீடமைப்புதிட்டம் ,சம்மாந்துறை  போன்ற பிரதேசங்களில்  தற்கொலைதாரிகள் தங்குவதற்கான வீடுகளை இச் சந்தேக நபரே  வாடகை அடிப்படையில்  பேசிக் கொடுத்துள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top