ஞானசார தேரர் விடுதலை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த, சிறிலங்கா ஜனாதிபதியின்  செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஹோமகம நீதிவான் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார்.

கற்றறிந்த நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததையடுத்து, வண ஞானசார தேரருக்குத் தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட விசாரணையொன்றின் பின்பே, இந்தத் தண்டனையும் தீர்ப்பும் நிறைவேறியது.

உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது.

இந்நாட்டின் பௌத்தர் அல்லாத குடிமக்கள் மீதான வன்முறையைத் தூண்டிவிடும் தேரரின் நடவடிக்கைகள் மீது ஒரு போதும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், இச்சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டதிற்குட்படுத்தப்பட்டு கையாளப்பட்டார்.

எல்லா குடிமக்களும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவாலானது,  இனவெறி மற்றும் மதவெறியைக் கட்டுப்படுத்தி வைப்பதாகும்.

அரசாங்கமானது இச்சவாலைக் கருத்திற்கொண்டு எந்த இனத்தவர் மதத்தவராய் இருப்பினும் எல்லா கடும்போக்காளர்களையும் கடுமையாகக் கையாள வேண்டும்.

எல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் ஒரேவிதமாக நடத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்

இந்நிலையில் பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின்  அதி மென்போக்கானது நாட்டிற்குத் தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது.

அச்செய்தி யாதெனில், சிறுபான்மை மக்களிற்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது.

ஆனால் பெரும்பான்மை மக்களிற்குச் சொற்ப அசௌகரியம் அளிக்கும் செயல்களோ மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்பதாகும்.

இது பேரினவாதத்தினை இன்னுமொரு கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையாகும்.

ஜனாதிபதியின் இந்நடவடிக்கையைக் கண்டனம் செய்து இவ் ஆபத்தான போக்கினை மாற்றுவதற்கு நேர்வழி சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்.என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top