சந்தேக நபரை விடுவிக்குமாறு
இராணுவத் தளபதியை கேட்கவில்லை
அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிப்பு



கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு தான் இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “முஸ்லிம் விவகார அமைச்சின் மூத்த ஆலோசகர் ஒருவர், என்னைத் தொலைபேசியில் அழைத்து, தனது மகனை அடையாளம் தெரியாத குழுவினர் கொண்டு சென்று விட்டனர் என்றும் அவர் எங்கிருக்கிறார் என்று தேடிப் பார்த்து சொல்லுமாறும் கேட்டார்.

பின்னர் இரண்டு நாட்களாக அவரைப் பற்றி பொலிஸாரிடம் விசாரித்தேன். தெகிவளை பொலிஸ் நிலையத்துக்கும் சென்றேன். அவர் அங்கு இல்லை என்றார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவைத் தொடர்பு கொண்டேன். பொலிஸாரிடம் அவர் இல்லையென்றால், இராணுவத் தளபதியிடம் கேட்குமாறு அவர் கூறினார்.

அந்த நபர் இராணுவத்தின் காவலில் இருக்கிறாரா என்று விசாரிக்கவே இராணுவத் தளபதியை தொடர்பு கொண்டேன்.

மனிதாபிமான அடிப்படையிலேயே அவ்வாறு செய்தேன். யாரையும் விடுதலை செய்யுமாறு நான் இராணுவத் தளபதியிடம் கேட்கவில்லை.

எனது சகோதரர் கைது செய்யப்படவில்லை. அதனை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை ஒன்றை பெற்றுள்ளேன்.

எனது ஆலோசகராக இயங்கிய மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். எனக்கு இரண்டு ஆலோசகர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் குறித்த மௌலவி இல்லை.

எனது இணைப்புச் செயலாளர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளும் பொய்யானவை.என்றும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top