ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடியில்
குண்டுவெடிப்பு - 16 பேர் காயம்
  
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்த  நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதால் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இதையும் மீறி பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், தலைநகர் காபூல் நகரில் உள்ள பகராம் மாவட்டத்தில் சம்சாத் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதனால் பொதுமக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இந்த குண்டுவெடிப்பில் 16 பேர் காயமடைந்தனர், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வாக்குப்பதிவு தாமதமானது. இந்த தாக்குலை தலிபான் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாக்குச்சாவடிகளில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top