தெற்காசியாவின் மிக உயரமான
தாமரைக் கோபுரம்
திறந்து வைக்கப்பட்டது

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

356 மீற்றர் (1168 அடி) உயரம் கொண்ட இந்த தாமரைக் கோபுரம் அமைக்கும் பணிகள், 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று மாலை 5 மணியளவில் நடந்த நிகழ்வில் தாமரைக் கோபுரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும், சீன தூதுவர் செங் ஷியுவானும் பங்கேற்றனர்.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஹிந்த ராஜபக் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியான போதும், அவர்கள் இருவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

நேற்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் அடுத்தவாரத்தில் இருந்து பார்வையிட முடியும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த தாமரைக் கோபுரத்தின் மேல் தளத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சமிக்ஞைகளை வழங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உணவகம், வணிக வளாகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், 400 ஆசனங்களைக் கொண்ட கருத்தரங்க மண்டபங்கள், நட்சத்திர விடுதி அறைகள், 1000 பார்வையாளர்கள் பங்கேற்கக் கூடிய அரங்கு, பார்வையாளர் மாடம் உள்ளிட்ட பொழுது போக்கு மற்றும் மக்கள் பயன்பாட்டு வசதிகள் இந்த தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தாமரைக் கோபுரத்தை அமைப்பதற்கு 104.3 மில்லியன் டொலர் செலவாகியுள்ளது. இதில் 80 சதவீத  செலவினங்களை சீன அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top