கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை
தேர்தல் நேரத்தில்
பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ள புகைப்படம்
  
2001-ம் ஆண்டு தனியார் பாடசாலையில் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிரியராக பணியாற்றி போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

கனடாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 21 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் கிளப்பியுள்ள சர்ச்சை அவரது தேர்தல் பிரசாரத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது பாடசாலையில் நடைபெற்ற ஒரு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அந்த புகைப்படத்தில் ஜஸ்டின் ட்ரூடோ முகம், கழுத்து மற்றும் கைகளில் கருப்பு மை பூசி வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கிறார். இதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ இனவெறியை வெளிப்படுத்தியதாக கூறி அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மேலும் பன்முக கலாசாரம் கொண்ட மக்கள் வசிக்கும் கனடாவில், ஜஸ்டின் ட்ரூடோவின் இந்த புகைப்படம் நிறவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “நான் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும், நிறவெறிக்கு எதிராகவும் பணிசெய்ய இருக்கிறேன். நான் எனது சிறுவயதில் பெரும் தவறு செய்துவிட்டேன். நான் அதைச் செய்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்என கூறியுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top