யாரை ஆதரிப்பதென நேரடியாக கூற முடியாது
ஐக்கிய தேசிய முன்னணியிடம்
தமிழ்க் கூட்டமைப்பு திட்டவட்டம்



யாரையும் ஆதரிப்பதாக நேரடியாக அறிவிக்க முடியாது.தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கும் தரப்புக்கே ஆதரவை வழங்க முடியுமென்று  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

.தே.முவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நேற்று பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனின் கொழுப்பிலுள்ள இல்லத்தில் நேற்று முற்பகல் 11மணியளவில் நடந்த இந்த சந்திப்பில் கூட்டமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

.தே.கூ சார்பில் எம்.பிக்களான இரா.சம்பந்தன், சுமந்திரன் மற்றும் .தே.மு சார்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர , ராஜித சேனாரத்ன, மலிக் சமரவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பு தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது,

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது எமது நிலையான நிபந்தனையாகவே உள்ளது. அத்துடன் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களில் நீதி வேண்டும். எனினும் நாம் எமது நிபந்தனைகளுடன் பொருத்தமான தலைமைத்துவத்துக்கு ஆதரவுகளை வழங்கும் நோக்கத்தில் உள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் நாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எப்போதுமே நிபந்தனைகள் அற்ற ஆதரவை வழங்கியதில்லை.

தேசிய அரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்த நேரத்தில் நாம் ஆதரவை வழங்கினோம். அதுவும் நிபந்தனைகள் அற்ற ஆதரவு என கூற முடியாது. குறிப்பாக தமிழர் விடயங்களில் ஒரு பிரதான  கட்சி ஏதேனும் முயற்சி எடுத்தால் மற்றைய பிரதான கட்சி அதனை எதிர்ப்பதுவே  எமது அரசியலில்  பிரதான நோக்கமாக இருந்தது. எனினும்  கடந்த தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சிக்கு வந்த காரணத்தினால் இதுவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டும் அறிய சந்தர்ப்பம் என்பதை நாம் உணர்ந்தோம். அதனால் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவுகளை  வழங்கினோம்.

தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நியாயமான நோக்கம் ஒன்று ஜனாதிபதிக்கு இருந்தது. இப்போது அந்த நோக்கம் இல்லாமல் அல்ல.

தான் பதவிக்கு வந்தவுடன் தமிழ் மக்கள் விடயங்களில் பல நடவடிக்கைகளை கையாண்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் நடு வழியில் பாதை தவறிவிட்டார்.


வேறு சில காரணங்களுக்காக, அதாவது ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்ட  முரண்பாடுகள் காரணமாக அவர் இடைநடுவே சென்ற பாதையில் இருந்து விலகிவிட்டார். அதுவே குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

எனினும் தமிழ் மக்களின் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையை நாம் கைவிடவில்லை. எமக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளது அதனை நாம் கைவிடவும் தயாரில்லை.

இது ஏமாற்று வழிமுறை அல்ல. அடுத்த தீபாவளியாவது எமக்கு மகிழ்ச்சியான தீபாவளியாக அமைய வேண்டும் என்பதில் அதனை எதிர்பார்த்து நாம் செயற்பட்டு வருகின்றோம்.  அரசியல் அமைப்பு விடயங்கள் இறுதிக் கட்டத்தில் தடைப்பட்டுள்ளது.

இதுவும் பிரதான இரண்டு கட்சிகளின் பிளவே காரணமாகும். எனினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த நிலைமைகள் மீண்டும் மாறக்கூடும். வேட்பாளர்கள் விடயத்தில் நாம் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சஜித் பிரேமதாசவுடன் நாம் கலந்துரையாடியிருந்தோம். அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் பல மணிநேரம் பேசினோம், பின்னர் அமைச்சர் சஜித் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் அங்கும் நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
இந்த பேச்சுவார்த்தைகளில் முரண்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை. முரண்படக்கூடிய விடயங்கள் எதுவும் கிடையாது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பங்காளிக்கட்சிகளுடன் பேசி தீர்மானம் எடுக்க முடியும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்ற தீர்மானத்தில் நாம் பங்குகொள்ளப்போவதில்லை.

நாம் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்தவர்களோ அல்ல.

ஆனால் வேட்பாளர்களாக வர விரும்பும் நபர்கள் எம்முடன் பேச விரும்பினால் நாம் பேசுவோம்.  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடனும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேச நாம் தயாராகவே இருக்கின்றோம். அவர்கள் விரும்பினால் பேசலாம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை காண எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற விளக்கம் தேவைப்படின் பேசலாம். அதில் நாம் ஒருபோதும் ஒதுங்கிப்போவது கிடையாது. எவரோடும் நாம் பேசத் தயார் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top