நீதிமன்ற உத்தரவை மீறி
நீராவியடி ஆலயம் அருகே
பிக்குவின் உடல் தகனம்

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோயால் மரணமான கொலம்பகே மேதாலங்கார தேரரின் சடலம் நேற்று அதிகாலை நீராவியடிக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

ஆலய வளாகப் பகுதியில் தேரரின் தகனம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு தடைவிதிக்கக் கோரி, ஆலய நிர்வாகம் சார்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பதில் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இரண்டு தரப்புகளையும் முன்னிலையாகி, தீர்வைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதுவரை பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ கூடாது என்று தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணைகளின் பின்னர், ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு எதிரேயுள்ள இராணுவ முகாமுக்குப் பின்புறமாக, கடற்கரைப் பகுதியில் நீதிமன்றம் அடையாளப்படுத்தும் இடத்திலேயே சடலத்தை எரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு உரிமை கோரவோ அங்கு நினைவுச் சின்னம் அமைக்கவோ முடியாது என்றும் நீதிவான் கட்டளை வழங்கினார்.

இந்த நிலையில், நீதிமன்றக் கட்டளை எழுத்து மூலம் வழங்கப்படுவதற்கு முன்னர், நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பல நூறு பொலிஸாரின் பாதுகாப்புடன், பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் இணைந்து, பிக்குவின் சடலத்தை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, ஆலயத்துக்கு அருகேயுள்ள கேணி அமைந்துள்ள இடத்தில் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது.

இதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதும், அங்கு குவிக்கப்பட்டிருந்த கலகம் அடக்கும் பொலிஸாரின் உதவியுடன், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள், தாம் திட்டமிட்டபடி, தேரரின் உடலை தகனம் செய்தனர்.

ஆலய வளாகப் பகுதியில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவம், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.









0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top