தலிபான்கள் விரலை வெட்டியும்
வாக்குப் போட்ட மனிதர்
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தற்காக 2014 ல் தொழிலதிபர் ஒருவரின் விரலை தலிபான்கள் வெட்டினர். இருப்பினும் தலிபான்களுக்கு பயப்படாமல் அவர் 2019 தேர்தலில் மீண்டும் வாக்களித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பல காலமாக தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரத்தை கொண்டு வர முயற்சித்து வருகின்றனர். 2001 ம் ஆண்டு ஆப்கானில் நுழைந்த அமெரிக்க படைகள், அப்போது நடந்த போரில் தலிபான்களை வீழ்த்தி, ஜனநாயக ஆட்சியை கொண்டு வந்தனர். போரில் தோல்வி அடைந்ததற்கு பழிவாங்கும் விதமாக, அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர். 2014 ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.மிரட்டலையும் மீறி வாக்களித்த 6 பேரின் விரல்களை வெட்டினர்.
அவ்வாறு விரலை இழந்த ஒருவர் தான் சபியுல்லா சபி. இவர் 2014 ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து விட்டு, காபூரில் இருந்து தனது வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கோஸ்ட் பகுதியில் அவரை வழிமறித்த தலிபான்கள், கையில் வாக்களித்தற்கான அடையாள மை இருந்ததால் வலது கை ஆள்காட்டி விரலை வெட்டினர்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நேற்று (செப்.,28) நடந்தது. தேர்தலை சீர்குலைக்க சில இடங்களில் தலிபான்கள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். அதையும் மீறி தேர்தல் நடந்தது. இதில் சபி வாக்களித்தார்.
இது பற்றி சபி கூறுகையில், அது மிக வலியான அனுபவம். ஆனால் போனது வெறும் விரல் தான். எனது குழந்தைகள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து தான் தற்போது எதிர்ப்பை மீறி வாக்களித்தேன். அவர்கள் என் கையையே வெட்டி இருந்தாலும் நான் அமைதியாக இருந்திருக்க மாட்டேன்.
இம்முறை வாக்களிக்க வேண்டாம் என எனது குடும்பத்தினர் கூறினர். ஆனால் அவர்களை அழைத்துச் சென்று, அனைவரும் குடும்பத்துடன் வாக்களித்தேன். ஜனநாயகத்தை ஆதரித்தே வாக்களித்தேன் என்றார். மேலும் தாலிபன்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் வாக்கக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் சபி கோரிக்கை வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment