9 பேர் உயிரைப் பலி வாங்கிய சம்பவம்:
அமெரிக்க தேவாலயத்தில் தாக்குதல் நிகழ்த்திய இளைஞர் கைது

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவருக்கான தேவாலயத்தில் கடந்த புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் தொடர்பாக 21 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 டிலன் ஸ்டார்ம் ரூஃப் என்ற அந்த இளைஞரை கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தைக் கொண்டு அவரது நண்பர்கள் அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
 இனவெறி காரணமாகவே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், டிலன் ஸ்டார்மின் காரிலுள்ள எண் பலகையில், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது கறுப்பின அடிமை முறையை ஆதரித்த தெற்குப் பிராந்தியப் படையின் கொடி பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 மேலும், அவரது முகநூல் வலைதளப் பக்கத்தில், முன்னாள் தென் ஆப்பிரிக்க, ரொடீசிய இனவெறி அரசுகளின் இலச்சினைகள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், ""டிலன் ஸ்டார்ம் இனவெறிக் கொள்கையுடையவராக இருப்பார் என்பதை இதுவரை நாங்கள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. அவருக்கு ஏராளமான கறுப்பின நண்பர்கள் உள்ளார்கள்'' என்று தெரிவித்துள்ளனர்.
 தெற்கு கரோலினா மாகாணம், சார்லஸ்டன் நகரில் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இமானுவேல் ஆப்பிரிக்கன் மெத்தடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயம் அமைந்துள்ளது.
 இந்தத் தேவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தின் மீது டிலன் ஸ்டார்ம் இரவு சுமார் 9 மணிக்கு துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.  இதில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் தேவாலயத்தின் பேராயரும், தெற்கு கரோலினா மாகாண மேலவை உறுப்பினர் கிளெமென்டா பிங்க்னியும் (41) ஒருவர் ஆவார்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top