சிறுநீரக நோயாளிகளின்
நலனோம்பலுக்காக “நிரோகா”
அதிஷ்ட இலாபச் சீட்டு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்து வைப்பு
சிறுநீரக
நோயாளிகளின் நலனோம்பலுக்காக “நிரோகா” என்ற பெயரில்
புதிய அதிஷ்ட இலாபச் சீட்டொன்றை
தேசிய லொத்தர்
சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அதிஷ்டலாபச்
சீட்டின் வெளியீட்டு
வைபவம் ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் தலைமையில்
இன்று 24 ஆம் திகதி முற்பகல் கொழும்பில்
இடம்பெற்றது.
இங்கு ஜனாதிபதி உரைநிகழ்த்துகையில் கூறியதாவது,
மக்கள் பணத்தை பதாதைகளுக்கும் கட்டவுட்களுக்கும் செலவிடுவதை விடுத்து அரசியல்வாதிகள் அப்பணத்தை மக்கள் நலனுக்காக செலவிடவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிறுவனங்களின் பணம் தத்தமது சொந்த பிரதிமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவும் பிரச்சார நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டதோடு, அதற்காக செலவிடப்பட்ட தொகை பில்லியன் கணக்கானவையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தகைய ஒரு பின்புலத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பதாதைகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக பொது அபேட்சகரான தனக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட பணத்தை தான் சிறுநீரக நோயாளிகளின் நலன்களுக்காக ஒரு நிதியத்தை தாபிப்பதற்கு வழங்கியமையை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
சிறுநீரக நோயாளிகளின் நலன்களுக்காக “நிரோகா” என்ற பெயரில் தேசிய லொத்தர் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அதிஷ்டலாபச் சீட்டை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வில் இன்று (24) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிலர் களியாட்டங்களுக்காக விடுதிகள் மற்றும் நிலையங்களில் ஒரு இரவைக் களிப்பதற்காக பல இலட்சம் ரூபாய்களை செலவிடுகின்றனர். அப்பணத்தை இந்த நாட்டில் வாழும் வறிய மக்களுக்காகவும் சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சைகளுக்காகவும் அன்பளிப்பு செய்வது சிறந்ததென தான் கருதுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்த நாட்டிலுள்ள சிறுநீரக நோயாளிகளின் நலன்களுக்காக சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்றை தாபித்தமை மற்றும் வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் புதிய ஒரு நிதியத்தை தாபித்தமை உள்ளடங்கலாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
சிறுநீரக நோய் நிவாரண நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்துவதற்காக தேசிய லொத்தர் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “நிரோகா” அதிஷ்டலாபச் சீட்டு விற்பனையின் மூலம் ஈட்டப்படும் பணம் முழுமையாக இந்த நோயாளர்களின் நலன்களுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்னார்.
இந்த நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் ராஜித சேனரத்த, இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷாமிளா பெரேரா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
0 comments:
Post a Comment