சாய்ந்தமருதில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஹர்த்தால்

பிரார்த்தனை, தக்பீர் முழக்கத்துடன் பாரிய பேரணி!

சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று 15 ஆம் திகதி திங்கள்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைதியான முறையில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டதுடன் பாரிய பேரணி ஒன்றும் இடம்பெற்றது. அத்துடன் விசேட தொழுகை, பிரார்த்தனை மற்றும் மக்கள் பிரகடன நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.
இன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், கடைகள், அரச, தனியார் நிறுவனங்கள். பாடசாலைகள், வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம் மற்றும் நிறுவங்களின், ஒத்துழைப்புடன் சாய்ந்தமருது பொது அமைப்புகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னதாக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடிய ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்..ஆதம்பாவா மிகவும் உருக்கமான உரையொன்றை நிகழ்த்தினார்.
இவரின் உரையை அடுத்து மக்கள் அனைவரும் ஸலாத்துல் ஹாஜா எனும் விசேட தொழுகையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மௌலவி எம். ஆதம்பாவா அவர்களினால் (துஆ) பிரார்த்தனையும் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டார். இதன்போது மக்கள் நாரே தக்பீர் கூறி அங்கீகாரம் வழங்கினர்.

Ø  எமது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் சார்பில் வலுவாக முன்னெடுத்துச் செல்கின்ற எமது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையினருக்கு இந்த மக்கள் பிரகடனம் நன்றியையையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 எமது பள்ளிவாசலின் இந்த முன்னெடுப்பை மழுங்கடிக்கவோ ஏமாற்றித் தோற்கடிப்பதற்கோ நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இந்த மக்கள் பிரகடனம் உறுதி செய்கிறது.

 சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்காக எமது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையினர் முன்னெடுக்கும் காத்திரமான நடவடிக்கைகளுக்கு மக்களாகிய நாம் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என இந்த மக்கள் பிரகடனம் உறுதி செய்கிறது..

Ø  உள்ளூராட்சி அமைச்சரினாலும் எமது அரசியல் தலைமைகளினாலும் வாக்குறுதியளிக்கப்பட்ட எமக்கான உள்ளூராட்சி சபையை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக வத்தமானிப் பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்த மக்கள் பிரகடனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

 இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற போது எமது சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு மாத்திரம் உள்ளூராட்சி சபையொன்று உருவாக்கப்படாமல் பாரபட்சம் காட்டப் பட்டு வருவதையிட்டு இந்த மக்கள் பிரகடனம் பெரும் கவலையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 எல்லைப் பிரச்சினை எதுவுமில்லாத எமது ஊருக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தினை ஏற்படுத்தாமல் விடுவதற்கு எந்தவொரு போலிக் காரணத்தையும் முன்வைக்க முடியாது என்பதை எமது அரசியல் தலைமைகளுக்கு இந்த மக்கள் பிரகடனம் மிகவும் ஆனித்தரமாக சொல்லிக் கொள்கிறது.

Ø  இன்றைய இந்த அமைதிப் போராட்டமும் (துஆ) பிரார்த்தனையும் ஆரம்பம் மட்டுமே. எமது கோரிக்கை தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்படுமானால் எமது போராட்டம் வேறு வடிவங்களில் விஸ்பரூபம் பெறும் என்பதை இந்த மக்கள் பிரகடனம் பறைசாற்றுகிறது.

இவையே அங்கு நிறைவேற்றப்பட்ட பிரகடனங்களாகும்.

இதன் பின்னர் பள்ளிவாசல் முற்றத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கோஷங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு நாரே தக்பீர் முழக்கத்துடன் மாளிகைக்காடு சந்தி வரை மக்கள் பேரணியாக சென்று மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர்.































0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top