சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்மந்தமாக

ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கும் விடயத்தை

பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஏற்கனவே தெரிவிக்காமல்

அலைக்கழிக்கப்பட்டது ஏன்?

மாகாண சபையால் வழங்கப்பட்ட கடிதமும் ஒரு ஏமாற்று நடவடிக்கையா?

சாய்ந்தமருது மக்கள் கேள்வி! விசனமும் தெரிவிப்பு!!

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்மந்தமாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்திருக்கும் விடயத்தை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாகிகளிடம் ஏற்கனவே தெரிவிக்காமல் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டது ஏன்? என சாய்ந்தமருது மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது மாத்திரமல்லாமல் மாகாண சபை கடிதத்தைக் காண்பித்து  சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாக சபையையும் அந்த ஊர் மக்களையும் ஏமாற்றியுள்ளார்களா? என்றும் அந்த ஊர் மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்மந்தமாக கேட்ட கேள்விக்கு    கொடுத்த பதிலில் தெரிவித்துள்ள விடயங்களை   சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளி வாசல் நிர்வாகிகள் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் அவர்களை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை விடுத்து உதவி கேட்டபோது அந்த நேரத்தில்    ஏன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கும் எல்லை நிர்ணயப் பிரச்சினை பற்றிய விடங்களை பேசவில்லை என்ற கேள்வி அந்த ஊர் மக்களால் தற்போது எழுப்பப்படுகின்றது
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாக சபையினரிடம் எல்லை நிர்ணயப் பிரச்சினை பற்றிய விடங்கள் எதுவும் கூறாமல் நாம் செய்து தருவோம் எனக் கூறி பள்ளிவாசல் நிர்வாக சபையினர் அலைக்கழிக்கப்பட்டார்களா? என்ற கேள்வியையும் அந்த ஊர் மக்களால் எழுப்ப்ப்படுகின்றது.
பள்ளிவாசல் நிர்வாகிகளின் துண்டுப்பிரசுரத்தின்படி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி, உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான, எச்.எம்.எம் ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோருடன் அமைச்சர் அவர்கள் வருகைதந்து பள்ளிவாசல் மரைக்காயர் சபையின் பிரதிநிதிகள் முன்னிலையில் அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களிடம் தெளிவாக சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்வைத்தார்கள் அதனை அவதானித்த கௌரவ அமைச்சர் கரு ஜயசூரிய அவர்கள் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை செய்து தருவதாக உறுதியளித்தார்கள். அதே இடத்தில் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சின் செயலாளர் அவர்கள் சாய்ந்தமருதுக்கு தனியான ஒரு உள்ளூராட்சி சபை பெறுவது மிகவும் சாத்தியமானதென்றும், அதற்காக பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றார்.
1. கோரிக்கைப் பத்திரம் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரூடாக சமர்ப்பிக்குமாறும்
2. கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதம்.
3. கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்மதக் கடிதம் போன்றவற்றை உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இப்படி நிலைமை இருந்த நிலையில் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள்  தெரிவித்திருக்கும் புதிய விடயங்கள் பற்றிய மர்மம்தான் என்ன எனவும் மக்களால் கேள்வி எழுப்ப்ப்படுகின்றது.

இதோ ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் அவர்கள் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்மந்தமாக தெரிவித்திருந்த கருத்துக்கள்,

சாய்ந்தமருது பிரதேச சபையைப் பொறுத்தவரை, நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்கின்ற குழுவின் அறிக்கை உரிய அமைச்சரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அதை வர்த்தமானியில் பிரசுரித்த பின்னர் தான் மீண்டும் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை பொதுநிர்வாக உள்நாட்டல்கள் அமைச்சின் செயலாளர் தடல்லகே அதிலுள்ள நியாயங்களை எங்களுக்கு சொல்லியிருக்கிறார். அவ்வாறன வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் தான் சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும். அதற்காக நாங்கள் முழு முயற்சி செய்வோம். இதை காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் காரணங்களுக்காக எவர் எதைச் செய்தாலும், சாய்ந்தமருது பிரதேச சபையை நிறுவுகின்ற விஷயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் செயல்படுகின்றது என்ற விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், முத்தலிப் பாவா பாறுக், எம்.எஸ்.எம்.அஸ்லம், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா (மதனி), அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.
இதேவேளை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்கள் மாகாண சபையினால் வழங்கப்பட்டது எனக் கூறி ஒரு கடிதத்தை சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா அவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கொடுத்து சாய்ந்தமருது பிரதேச சபைக்கான ஒப்புதல் மாகாண சபையினால் வழங்கப்பட்டுள்ளது என்று காண்பித்தார் அல்லவா?  இதுவும் ஒரு அரசியல் ஏமாற்று நாடகமா என்றும் சாய்ந்தமருது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  
மாகாண சபை கடிதத்தைக் காண்பித்து  சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாக சபையும் அந்த ஊர் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளார்களா? என்று கவலையுடன் இதனையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது..

இது சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்தது பற்றிய சம்பவங்களை விளக்கி 2015.06.08 ஆம் திகதி வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்,

கௌரவ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் றவுப் ஹக்கீம் அவர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்து அதன்படி 10.04.2015ம் திகதி காலை 8.00 மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் H.M.M ஹரீஸ் அவர்கள் எம்மைத் தொடர்புகொண்டு மாலை 05.30 மணிக்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர் வினியோக வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான கௌரவ அல்-ஹாஜ் றவுப் ஹக்கீம் அவர்களை சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெறுவது விடயமாக சந்திக்க நேரம் கிடைத்துள்ளதாக அறிவித்து கொழும்பிற்கு புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து

ஜும்மா பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபையின் பிரதிநிதிகள் 10 பேரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், கௌரவ மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகரசபையின் கௌரவ பிரதிமேயர் ஏ.எல்.ஏ மஜீட் மற்றும் கௌரவ உறுப்பினர்களான ஏ.ஏ வசீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ. நஸார்தீன் ஆகியோர் சகிதம் காலை 09.45இற்கு கொழும்புக்கு பயணமாகினர்.
இதன்போது அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் தான் வெளிநாடு செல்வதால் அடுத்த வாரம் உரிய அமைச்சரை நேரடியாகச் சந்தித்துப் பேசுவோமெனவும் அதன்போது பிரதேச செயலாளரையும் அழைத்து வருமாறு கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது சந்திப்பு 2015.04.22ம் திகதி பகல் 12.00 மணிக்கு நீர் வினியோக வடிகாலமைப்பு அமைச்சில் கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை மீண்டும் அதே குழுவினர் பிரதேச செயலாளரையும் அழைத்துக் கொண்டு சந்தித்தபோது எல்லைகள் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்துவிட்டு கூறினார்கள். இன்றே நாங்கள் இந்தக் குழு சகிதம் பொது நிருவாக உள்ளூராட்சி அமைச்சில் கௌரவ அமைச்சர் கரு ஜெயசூரிய அவர்களைச் சந்திப்பதற்கு செய்துள்ளேன் என்றார்கள்.
அதன்பின் பி.ப.02.30 மணிக்கு கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம், கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் அல்-ஹாஜ் எம்.ரீ. ஹசன் அலி, கௌரவ உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ். தௌபீக், கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான, எச்.எம்.எம் ஹரீஸ், கௌரவ பைசால் காசிம் ஆகியோருடன் அமைச்சர் அவர்கள் வருகைதந்து எமது பள்ளிவாசல் மரைக்காயர் சபையின் பிரதிநிதிகள் முன்னிலையில் கௌரவ அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களிடம் தெளிவாக எங்களது கோரிக்கையை முன்வைத்தார்கள் அதனை அவதானித்த கௌரவ அமைச்சர் கரு ஜயசூரிய அவர்கள் செய்து தருவதாக உறுதியளித்தார்கள். அதே இடத்தில் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சின் செயலாளர் அவர்கள் சாய்ந்தமருதுக்கு தனியான ஒரு உள்ளூராட்சி சபை பெறுவது மிகவும் சாத்தியமானதென்றும், அதற்காக பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றார்.

1. கோரிக்கைப் பத்திரம் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரூடாக சமர்ப்பிக்குமாறும்
2. கல்முனை மாநகர சபையின் சம்மதக் கடிதம்.
3. கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்மதக் கடிதம் போன்றவற்றை உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதன்பின்னர் மாகாணசபையின் முதலமைச்சரின் கடிதத்தை கௌரவ கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் பெற்றுத்தருவதாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதேபோன்று கல்முனை மாநகரசபையின் கடிதத்தை கல்முனை மாநகரசபையின் எமதூர் உறுப்பினர்கள் பெற்றுத்தருவதாக பொறுப்பேற்றனர்.
இதில் முதலாவது விடயத்தை பள்ளிவாயல் மரைக்காயர் சபை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் ஊடாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரூடாகவும் அமைச்சுக்கு உடனடியாக அனுப்பிவைத்துள்ளது.
இதில் இரண்டாவது, மூன்றாவது விடயங்கள் இதுவரை நடந்தேறவில்லை.
மீண்டும் 2015.05.01ம் திகதி கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை மரைக்காயர் சபை உறுப்பினர்கள் ஒலுவில் கிரீன் விலாஸ் ஹோட்டலில் பி.ப. 3.00 மணிக்கு சந்தித்தது. இதன்போது அமைச்சர் அவர்களிடம் நடந்தேராத இரண்டு விடயங்களையும் முடித்துத் தருமாறும், தற்போது தற்போது கையாளுகின்ற நடைமுறையானது சாதரணமாக பொதுமக்களுடைய கோரிக்கையை அமைச்சு அதிகாரிகள் கையாளுகின்ற நீண்ட நாட்களை நகர்த்திச் செல்லக்கூடிய கடினமான வழிமுறையாகும்.
எனவே எங்களது ஊர் மக்கள் மிகவும் மனச் சோர்வுடனும், வேதனையுடனும் காணப்படுகின்றார்கள். ஆகவே இப்போதெல்லாம் மக்களின் கேள்வி கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்கள் வேண்டுமென்று காலத்தையும், நேரத்தையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார் என்ற மறைமுகமான சந்தேகத்துடன் காணப் படுகின்றார்கள். இந்த விடயத்தையும் கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களிடம் தெளிவுபடுத்தினோம்.
அத்துடன் வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் இந்த விடயங்கள் அவசரமாகவும், அவசியமாகவும் பெற்றுத்தரவேண்டுமென்றும் வலியுறுத்தினோம். அத்துடன் இவ்வாறான சிக்கலான வழிமுறைகளை கைவிட்டுவிட்டு, மிகவும் குறுகிய வழிமுறைகளைக் கையாண்டு மிகமிக விரைவாக இந்த விடயத்தினை முன்னெடுத்துச் சென்று உள்ளூராட்சி சபையை பெற்றுத்தர வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
இதனை நன்கு செவிமடுத்த கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்கள். தாங்கள் அனைவரினதும் கருத்துக்களை பார்க்கின்றபோது இச்சபையை பெற்றுக்கொள்வதற்கு நான் தான் தடையாக உள்ளேன் என்பது போன்று உங்கள் கருத்துக்கள் இருக்கின்றது என்று கூறி தொடர்ந்து உரையாற்றுகையில் கட்சி தீர்மானித்து விட்டது என்றும் அதேபோன்று தலைமைத்துவமும் தீர்மாநித்துவிட்டுத்தான் இதில் ஈடுபடுகின்றேன் பின்னர் ஏன் இதில் சந்தேகம்? நான் உத்தரவாதம் தருகின்றேன் பலதடவை உரக்கக் கூறினார்கள் அத்துடன் செய்ய முடியாத வேலைக்குப் பின்னால் தான் போவதில்லை என்றும் கூறினார்கள்.
மேலும் கூறுகையில் இந்த விடயத்தில் எதுவித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. கல்முனை மாநகரசபையின் கடிதத்தை பெருவதற்கு அதிகாரத்திலுள்ள எமது உறுப்பினர்களை அழைத்துப் பேசி அதனை தான் செய்து தருவதாகப் பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் கல்முனை மாநகரசபையின் மு.கா. உறுப்பினர்களோடு பேசி மாநகரசபையின் சம்மதக் கடிதத்தைப் பெறுகின்ற வேலை அமைச்சர் அவர்களால் நடந்தேறவில்லை என்பதை உணர்ந்த பள்ளிவாசல் நிருவாகம் 2015.05.15ம் திகதி வெள்ளிக்கிழமை தோனா அபிவிருத்தி வேலைத்திட்டம் அங்குரார்ப்பன நிகழ்வின்போது பள்ளிவாசல் நிருவாகம் அமைச்சரை அணுகி சந்தித்துப் பேசுவதற்கு நேர ஒதுக்கீடு ஒன்று கோரியபோது கௌரவ அமைச்சர் ஹக்கீம் அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதே தினம் இரவு 08.00 மணிக்கு அட்டாளைச்சேனையில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களைச் சந்தித்து நேர ஒதுக்கீட்டைப்பெற கௌரவ மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் சகிதம் பள்ளிவாசல் குழு முயன்றபோது அதனையும் அமைச்சர் அவர்கள் உடனடியாக நிராகரித்தார்கள்.
மீண்டும் மனம்தளராது 2015.05.20ம் திகதி அமைச்சரை சந்திப்பதற்காக பள்ளிவாசல் நிருவாகத்தில் இருந்து தலைவர், செயலாளர் சகிதம் ஐவர் அடங்கிய குழு கொழும்பிற்குச் சென்றது. அங்கு கௌரவ பா.உ.எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை சந்தித்து அமைச்சர்களான றவுப் ஹக்கீம், மற்றும் கரு ஜெயசூரியா ஆகியோரைச் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கோரப்பட்டது. இதன்போது கௌரவ கௌரவ பா.உ.எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர்களை பி.ப. 01.00 மணிக்கு சந்திப்பதற்கு ஏற்பாடுசெய்வதாக கூறினார்கள்.
பின்னர் கௌரவ அமைச்சர் கரு ஜயசூரிய அவர்கள் யாழ்ப்பாணம் சென்றுள்ளதால் சந்திக்க முடியாது எனவும், கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை வேலைப்பளு மற்றும் வேறு கூட்டங்கள் இருப்பதாலும் சந்திக்க முடியாது உள்ளது எனவும் நண்பகல் 12.00மணிக்கு கூறினார்கள்.
அத்துடன் சென்ற குழுவினர் மனச்சோர்வுடன் வீடுதிரும்பினர்.
இதுவரைக்கும் எடுத்த முயற்சிகளுக்கும், அனுப்பப்பட்ட ஆவணங்கள் உள்ளூராட்சி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக 2015.05.14ம் திகதி இடப்பட்டு எமது பள்ளிவாசலுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக கல்முனை மாநகரசபை மேயர் கௌரவ நிஸாம் காரியப்பர் அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசியபோது, அவர்கள் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையைப் பெறுவதில் எதுவித ஆட்சேபனையும் இல்லை ஏனெனில் சாய்ந்தமருது 6 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தான் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அல்-ஹாஜ் றவுப் ஹக்கீம் அவர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து 2015.05.25ம் திகதி காலை 7.00 மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை சந்தித்தபோது, தான் போவதாகவும், இன்று கொழும்புக்குச் சென்றவுடன் மு.கா. தலைவரும், அமைச்சருமான அல்-ஹாஜ் றவுப் ஹக்கீம் அவர்களை இன்றே எப்படியாவது சந்தித்து விடையத்தைக் கூறி அவர்கள் கூறுகின்ற பதிலை அறிவிப்பேன் என்றார்கள்.
ஆனால் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவரிடமோ, அல்லது செயலாளரிடமோ நேரடியாக எதுவுமே சொல்லவில்லை. மரைக்காயர் சபையின் உறுப்பினர் ஒருவரிடம் செய்து கொடுப்பேன் தானேஎன்று எம்.பி. இடம் கூறியதாக ஒரு தகவல் மாத்திரமே கிடைத்தது.
இவ்வாறான அமைச்சரின் 2015.05.01ம் திகதிய வெறும் உத்தரவாதங்களோடு மட்டுமே எமக்கான உள்ளூராட்சி சபையின் இன்றைய நிலை உள்ளது.
எனவே இவ்வாறான உத்தரவாதங்களுடன் மட்டும் கட்சியும் தலைமைத்துவமும் நின்று கொள்வது நியாயமானதல்ல,
அத்துடன் இதனை ஆக்கபூர்வமாகவும், பெற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் பொருத்தமான வழிமுறைகளைக் கையாண்டு மிகவும் விரைவாக சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை பெற்றுத் தருவதற்கு முயற்சிக்கவேண்டும் என்பதே எமது சாய்ந்தமருது பிரதேச மக்களின் ஆவலான எதிர்பார்ப்பெந்தையும் நாம் நன்கு அறிவோம்.
இந்த உள்ளூராட்சி சபைக் கோரிக்கை மழுங்கடிக்கப்படுமேயானால் மக்களே இறுதித் தீர்ப்பாளர்களாக இருப்பார்கள்என்பதும் எமது பள்ளிவாயல் மரைக்காயர் சபை நன்கறிந்துள்ளது.
மரைக்காயர் சபை
ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்
சாய்ந்தமருது மாளிகைக்காடு.
2015.06.08




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top