வங்கதேசத்தில் மதச்சார்பற்ற கருத்துகளை

சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த

சட்டக் கல்லூரி மாணவரான இளம் கட்டுரையாளர் படுகொலை!


வங்கதேசத்தில் மதச்சார்பற்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த சட்டக் கல்லூரி மாணவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சில்ஹட் நகரைச் சேர்ந்த நிஜாமுதீன் சமத் ( வயது28), ஜகந்நாத் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவர் ஆவார்.
 பங்கபந்து ஜாதியா ஜுபோ பரிஷத் அமைப்பின் சில்ஹட் பிரிவு ஆய்வுச் செயலராகவும், மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.
 இஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான கருத்துகளை முகநூல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
 வங்கதேச உள்துறை அமைச்சகத்துக்கு மதவாதிகள் அனுப்பியுள்ள கொலைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 84 மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர்களில், நிஜாமுதீன் சமதும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
 இந்தச் சூழலில், கல்லூரியிலிருந்து வீடு நோக்கி தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த நிஜாமுதீன் சமதை, மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அரிவாளால் புதன்கிழமை இரவு சரமாரியாக வெட்டினர். அத்துடன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் நிஜாமுதீன் சமத் உயிரிழந்தார்.

நிஜாமுதீனுடன் சென்று கொண்டிருந்த அவரது நண்பரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top