தந்தையின் விருப்பத்திற்கு அமைய
சிறிது காலம் கிராம சேவகராக பணியாற்றினேன்!

- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக பரந்துபட்ட சேவைகளை வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கிராம சேவகர்களுக்கு சமாதான நீதவான் பதவிக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குமாறு பொலன்னறுவையில் இடம்பெற்ற கிராம அலுவலர் சம்மேளனத்தின்போது ஜனாதிபதி அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரமன்றி முழு இலங்கையிலும் உள்ள கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் அடையாள நிகழ்வாக கிராம அலுவலர்கள் சிலருக்கு ஜனாதிபதி அவர்களினால் சமாதான நீதிவான் நியமனம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி  இங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கலாசாரத்தில் கிராமத்தை அடிப்படையாக கொண்ட கிராமிய தலைவர்கள் தொடர்பில் எமக்கு வரலாற்று சிறப்புமிக்க பின்னணி உள்ளது.
சமூக வணிகமயமாக்கப்படுவதற்கு முன்னர், தொழிற்நுட்பம் வளராத காலத்தில் கிராமங்களில் ஐக்கியம், ஒழுக்கம் போன்ற மனித விழுமியங்களை கிராமத்தை அடிப்படையாக கொண்ட தலைவர்களே பாதுகாத்தனர்.
கிராமத்து விகாரையின் பிக்குகள், கிராம பாடசாலையின் அதிபர், கிராம மருத்துவர், கிராம விதானயார் ஆகிய சிலரே கிராமத்தை முழுமையாக வழிநடத்தினர்.
இவர்கள் கிராமங்களின் குணநலன்களையும் நல்லொழுக்கத்தையும் முழுமையாக பாதுகாத்தனர். எனது தந்தை கிராமத்து விதானயார். அவர் வகித்த அந்த பதவியில் ஒரு நாளாவது நான் இருக்க வேண்டும் என தந்தை விரும்பினார்.
தந்தையின் விருப்பத்திற்கு அமைய நான் கிராம சேவகர் பதவிக்கு விண்ணப்பித்தேன். ஆனாலும் சிறிது காலமே நான் கிராம சேவகராக பணியாற்றினேன்
அரச ஊழியர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதற்கு தான் தயாரில்லை.
அரச உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் அறிவித்துள்ளேன்., அரசியல்வாதியும் அரச உத்தியோகத்தரும் தனது கடமை தொடர்பில் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
இரண்டு ஆண்டுகாலம் கிராம உத்தியோகத்தராக பணிபுரிந்து பல அனுபவங்களைப் பெற்ற ஒருவரென்ற வகையில் கிராம உத்தியோகத்தர் பதவி தொடர்பில் தனது உள்ளத்தில் மிகுந்த கௌரவம் உள்ளது. , கிராம அலுவலர்களுக்கு சமூகத்தில் உரிய கௌரவம் வழங்கி கிராமிய தலைமைத்துவத்தில் முக்கிய சமூக காரணியாக அவர்களை மாற்றுவதற்கு இன்று  இந்நியமனம் வழங்கப்படுகிறது.
கிராம அலுவலர்களுக்காக அரசு என்ற ரீதியில் மேற்கொள்ளப்படும் கடமை இத்துடன் முடிவடைவதில்லை என்பதுடன், அவர்களுக்கான வசதிகள், கொடுப்பனவுகள் மற்றும் வரப்பிரசாதங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் விசேட தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்ள்ளப்படும். என்றார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இதன்போது விசேட நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top