இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம்வென்ற 
    
சாக்ஷி மாலிக்கிற்கு 2.5 கோடி பரிசு!

விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு ஊக்கமளியுங்கள்...
உற்சாகப்படுத்தும் சாக்ஷி மாலிக்கின் தந்தை சுபீர் மாலிக்

இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை கௌரவிக்கும் விதமாக ஹரியானா அரசு 2.5 கோடி (இந்திய ரூபா) பரிசுத்தொகையுடன் அரசுவேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதுமேலும் மத்திய விளையாட்டு அமைச்சு சார்பில் ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
ஹரியானாவைச் சேர்ந்த பெண் மல்யுத்த வீரர் 23 வயதான சாக்ஷி மாலிக்,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
 இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவிற்கு 5வது பதக்கம் வாங்கிக் கொடுத்துள்ளார் சாக்ஷி. ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் 4வது இந்தியப் பெண் என்ற பெருமையும் சாக்ஷிக்கு கிடைத்துள்ளது
1992ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி ஹரியானா ரோடாக்கில் பிறந்தவர் சாக்ஷி மாலிக். 5 அடி 3 அங்குலம் உயரமுள்ள சாக்ஷி, 2002ம் ஆண்டு மல்யுத்தத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
இந்தாண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றார் இவர். ஒலிம்பிக்கில் இவர் விளையாடுவது இதுவே முதல்முறை ஆகும். முதல்முறை பங்கேற்பிலேயே பதக்கம் வாங்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார் சாக்ஷி.
கடந்த 2014ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றவர் சாக்ஷி. இதேபோல் ஆசிய விளையாட்டுப் போட்டி 2014ல் வெண்கலமும், டோஹாவில் நடைபெற்ற ஆசியன் சேம்பியன்ஷிப் 2015ல் வெண்கலமும் வென்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் மகளிர் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை வீழ்த்தி பதக்கம் வென்றார்
ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்ததையடுத்து, அவரது பெற்றோர்கள், விளையாட்டில் பங்கேற்க விரும்பும் பெண்களை தந்தையர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்றார் சாக்ஷி மாலிக். இதனையடுத்து இவரது தந்தை சுபீர் மாலிக், விளையாட்டில் ஈடுபடும் தங்களது பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பல பெண்கள் விளையாட்டில் பங்கேற்க ஊக்கம் பெற்றிருப்பதாக சுபீர் மேலும் தெரிவித்துள்ளார்.
தங்களது பெண்களை விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்காத பெற்றோர்களுக்கு, சாக்ஷி மாலிக் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்றும் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஹரியானா அரசு ஆதரவு அளிக்கிறது என்றும் சுபிர் கூறியுள்ளார்.
மேலும், 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தனது மகள் சாக்ஷி மாலிக் தங்கம் வெல்வார் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

"தொடக்க காலத்தில் பலரும் பெண் பிள்ளையை ஏன் மல்யுத்தப் பயிற்சிக்கு அனுப்புகின்றீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இன்று சாக்ஷி மாலிக்கின் கடின உழைப்பால் பதக்கம் வென்றதையடுத்து அவர்கள் அனைவரும் வாயை மூடிவிட்டனர்" என்று சாக்ஷி மாலிக்கின் தாயாரும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top