41 வருடங்களுக்குப் பின்
வங்காள தேச நிறுவனர் முஜிபுர் ரஹ்மான்
படுகொலையை விசாரிக்க கமிஷன் அமைப்பு



வங்காள தேச நிறுவனர் முஜிபுர் ரஹ்மான் படுகொலையை விசாரிக்க 41 வருடங்களுக்குப் பின்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
வங்காளதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். கடந்த 1975-ம் ஆண்டு அவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். அப்போது அங்கு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அப்போது தன்மாண்டியில் உள்ள அதிபர்  இல்லத்தில் முஜிபுர் ரஹ்மான் இருந்தார். அவரும், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதிபரின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள் அவாமி லீக் கட்சி தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு அப்போது வயது 55. அவரது இரு மகள்கள் (வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா,அவரது சகோதரி ஷேக் ரிஹானா) மட்டும் வெளியூரில் படித்ததால் தப்பினர்.
இக்கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ராணுவ ஆட்சி முடிந்து கடந்த 1996-ம் ஆண்டு அவாமி லீக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. முஜிபுர் ரஹ்மானின் மகளும், தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசீனா தலைமையில் ஆட்சி அமைந்தது.
அதன்பின்னர் புரட்சியில் ஈடுபட்டு முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரை படுகொலை செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் 12 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2010-ம் ஆண்டில் 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை குறித்து விரிவான விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சட்ட மந்திரி அனிசூல் ஹப் வெளியிட்டார்.
1975-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் திகதி அன்று நடந்த ராணுவ புரட்சியின் போது நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு சட்ட பூர்வமான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

ஆனால் மறைமுகமாக செயல்பட்டவர்கள் யார்? என கண்டறிய முடியவில்லை. விசாரணை கமிஷன் மூலம் அவர்கள் யார்? என அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். டாக்கா பல்கலைக்கழக துணை வேந்தர் அரீபின் சித்திக் இதுபற்றி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

ராணுவ புரட்சிக்கான ஆலோசனை அமெரிக்காவின் வாஷிங்டன் அல்லது வேறு நாட்டில் இருந்து வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top