ரவூப் ஹக்கீமின் இயலாமை வெளிப்பட்டுள்ளதன்
எதிரொலிதான் கிழக்கின் எழுச்சி!

முஸ்லிம் அரசியலின் இயலாமை எனும் நூல் அதனையே

 பறைசாற்றுகின்றது என்கிறார் ஜெமீல்

முஸ்லிம் சமூகத்திற்கான தலைமை என்பது நாட்டின் எந்த மூலை முடுக்கில் இருந்தும் உருவாகலாம். அது கிழக்கில் இருந்துதான் வர வேண்டும் என்று கிழக்கு மக்கள் கோஷமிடவில்லை. சமூகத்தின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதில் ரவூப் ஹக்கீமின் இயலாமை வெளிப்பட்டுள்ளதன் எதிரொலிதான் கிழக்கின் எழுச்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி. ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல் ஹக் எழுதியமுஸ்லிம் அரசியலின் இயலாமைஎனும் நூல் வெளியீட்டு விழா நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வை.எம்.எம்..மண்டபத்தில் முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. அதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இவ்விழாவில். ஏ.எம்.ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது;
கிழக்கின் எழுச்சி என்பது பிரதேசவாத நோக்கம் கொண்ட ஒரு சிந்தனையல்ல, அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை நம்பி ஏமாந்த மக்களின் உண்மையான உணர்வலையாகும்
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒருபோதும் பிரதேசவாத சிந்தனை கொண்டவர்களாக இருந்ததில்லை. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மரணித்த பின்னர் தென்னிலங்கையை சேர்ந்த ரவூப் ஹக்கீம், கிழக்கு முஸ்லிம்களின் ஏகமனதாக அங்கீகாரத்துடன் தலைவராக்கப்பட்டதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அப்படி எந்த விதமான தனிப்பட்ட எதிர்பார்ப்புமின்றி தலைவராக்கப்பட்ட ரவூப் ஹக்கீமை கடந்த ஒன்றரை தசாப்த காலமாக தமது சமூகத் தலைவனாக ஏற்றிருந்த கிழக்கு முஸ்லிம்கள், அவர் இந்த சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்பதையும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் அத்தலைமைக்கு எவ்வித கரிசனையும் கிடையாது என்பதையம் உணர்ந்ததன் வெளிப்பாடே கிழக்கின் எழுச்சியாக உருவெடுத்திருக்கிறது. அந்த உணர்வலையை எவரும் குறைத்து மதிப்பிட்டு மலினப்படுத்தி விட முடியாது.
எமது மூத்த எழுத்தாளர், சமூக ஆய்வாளர் நூறுல் ஹக் எழுதியுள்ள முஸ்லிம் அரசியலின் இயலாமை எனும் நூல் அதனையே பறைசாற்றுகின்றது.
இன்று வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒற்றைக்காலில் நிற்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதைத்தான் வலியுறுத்துகின்றது. அதற்கான முஸ்தீபுகள் திரைமறைவில் நகர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வாய் மூடி மௌனியாக இருக்கிறது. ஏன் இந்த இயலாமை. இந்த ஆபத்தை உணர்ந்தே கிழக்கு முஸ்லிம்கள் இன்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான சூழ்நிலையில் இருந்து முஸ்லிமகளை காப்பாற்றுவது எப்படி? எமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலம் என்ன என்பன தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் சமூக அமைப்புகள் சிந்திக்க தொடங்கியுள்ளன.

வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. கிழக்கு முஸ்லிம்களின் தலைவிதியை அவர் தீர்மானிக்க முடியாது. இது விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்என்று கலாநிதி ஜெமீல் குறிப்பிட்டார்.


Add caption

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top