தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை

மக்கள் சேவையில் கலந்து கொள்ளாத பிரதி அமைச்சர்

இடைநடுவில் எழுந்து சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவையில் கலந்து கொள்ளாத, தமது கட்சியின் பிரதியமைச்சர் தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அதிருப்தியினையும், கடுப்பினையும் வெளியிட்டதோடு, இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் – தான் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்ட  பொது மக்களின் குடி நீர்ப் பிரச்சினைகளை தீர்க்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை அமைச்சராக கொண்டதும் அமைச்சரே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுமான   அம்பாறை மாவட்ட  பொது மக்களின் குடி நீர்ப் பிரச்சினைகளை தீர்க்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை நேற்று 18 ஆம் திகதி அம்பாறை நகரில் இடம்பெற்றது. இம்மக்கள் சேவையில் திகாமடுல்ல மாவட்ட மக்களைப் பிதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான பிரதி அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவில்லை என்றும் மற்றொரு முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர் நிகழ்வின் இடைநடுவில் எழுந்து சென்றிருந்தமையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை அதிருப்திக்கும் கடும் கோபத்திற்கும் உள்ளாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  
இதேவேளை, மு.காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம், நிகழ்வு முடியும் வரை இருந்து செல்லுமாறு கட்சித் தலைவர் ஹக்கீம் வலியுறுத்திக் கூறியபோதும், அதை மதியாமல், நிகழ்வின் இடைநடுவில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து சென்றமையும் அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்களிடையே சலசலப்பினை ஏற்படுத்தியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
நேற்றைய நடமாடும் சேவை நிகழ்வில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ். தலைவர் ரவூப் ஹக்கீம்  மேலும் தெரிவிக்கையில்;
முஸ்லிம் காங்கிரஸுக்கு திகாமடுல்ல  மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பிரதியமைச்சர்கள். ஆனால், இந்தப் பிரதியமைச்சர்களில் ஒருவர் இன்றைய மக்கள் சேவை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், இங்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்துள்ளபோதிலும், அவர் இடையில் எங்கோ பயணம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், உங்கள் பயணத்தை வேறொரு நாளில் வைத்துக் கொள்ளுங்கள், இன்றைய தினம் இந்த நிகழ்வு முடியும் வரை என்னுடன் நீங்கள் இருந்து, மக்கள் பிரச்சினைகளைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.
மக்களுக்கான சேவைகள் நடைபெறும் இதுபோலான நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல், பாராமுகமாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நடப்பவர்கள் தொடர்பில் நான் கடுமையாக இருப்பேன்என்றும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இவ்வாறு உரையாற்றும்போது சம்மந்தப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல  நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்து, இந்த நிகழ்வில் நீங்கள் இருந்து விட்டுத்தான் போக வேண்டும் எனக் கூறியபோதும், குறித்த நடமாடும் சேவை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இடைநடுவில்  குறிப்பிட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கிளம்பிச் சென்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top