ஓட்டல் சர்வராக வேலை செய்யும்
அமெரிக்க ஜனாதிபதியின் இளைய மகள்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இளைய மகளான ஷாஷா ஒபாமா மார்த்த வினியார்ட் தீவில் உள்ள பிரபல மீன் உணவகத்தில் சர்வராக பணியாற்றிவரும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள வினியார்ட் தீவின் ஓக் பிளஃப்ஸ் நகரில் பிரபலமான மீன் உணவகம் ஒன்றுள்ளது. இந்த உணவகத்துக்கு சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி சமீபத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் ஆர்டர்களின்படி உணவு வகைகளை பார்சல் செய்து தருவது, மற்றும் காலை நேரத்தில் வியாபாரத்துக்கு அந்த உணவகத்தை தயார்நிலைப்படுத்துவது போன்ற வேலைகளை செய்துவரும் இந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக பொலிஸ் உடையணிந்த பாதுகாவலர்கள் பெரிய காரில் துப்பாக்கியுடன் காத்திருப்பதை கண்டு சக பணியாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
பின்னர்தான், தங்களுடன் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பது தங்கள் நாட்டின் ஜனாதிபதியும், உலகின் மிக முக்கிய வி.ஐ.பி.யுமான பராக் ஒபாமாவின் இளைய மகளான ஷாஷா என்பது அவர்களுக்கு தெரியவந்தது.
நடாஷா என்ற முழுப்பெயர் கொண்ட ஷாஷா, அந்த உணவகத்தின் பணியாளர்களுக்கான சீருடையுடன் பாதுகாவலர்கள் புடைசூழ காரில் ஏறும் புகைப்படங்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தங்கள் குழந்தைகளை சராசரி குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளைப் போல் வளர்க்கப் போவதாக மிச்சேல் ஒபாமா அடிக்கடி கூறிவந்துள்ளார். இதில் ஒருகட்டமாக ஒபாமாவின் மூத்த மகள் மாலியா ஹாலிவுட் ஷூட்டிங் தளங்களில் உதவியாளராக முன்னர் பணியாற்றியுள்ளார்.
தற்போது இரண்டாவது மகளான ஷாஷா பள்ளி கோடை விடுமுறையை இப்படி பயனுள்ள வகையில் கழிப்பதாக தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment