சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மஸ்ஜித் நூர் மசூதியில்,

கவிக்கோ அப்துல் ரகுமானின் உடல் நல்லடக்கம்

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மஸ்ஜித் நூர் மசூதியில், கவிக்கோ அப்துல் ரகுமானின் உடல் நல்லடக்கம்செய்யப்பட்டது.
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள மஸ்ஜித் நூர் மசூதியில், கவிக்கோ அப்துல் ரகுமானின் உடல் நல்லடக்கம் நேற்று சனிக்கிழமை (ஜூன் 3) பகல் 1 மணிக்கு நடைபெற்றது.  இதில் தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக, அவரது மகன் சையது அஸ்ரஃப் லண்டனில் இருந்து காலையில் 10 மணிக்கு வருகை தந்தார். அவரது இல்லத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்கு அப்துல் ரகுமானின் உடல் ஆம்புலன்ஸில் ஊர்வலமாக கொட்டிவாக்கம் பள்ளி வாசலுக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவரது மனைவி மெகபூ பேகம் நல்லடக்கம் செய்யப்பட்ட  இடத்துக்கு அருகிலேயே, கவிக்கோ அப்துல் ரகுமானின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சாகித்திய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவரும், புதுக்கவிதை உலகின் முன்னோடியாக திகழ்ந்தவரும், தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அப்துர் ரஹ்மான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் கடந்த (02-06-2017) வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மூச்சு திணறலால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரையில் பிறந்த அப்துர் ரகுமான் தனது தொடக்கக்கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி யையும் மதுரையில் உள்ள பாடசாலைகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடை நிலை வகுப்பில் தேறினார்.
தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய . வே. சுப்பிர மணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம் பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பத்தினர் உருது கவிஞர்களாக இருந் துள்ளனர்.
அதனால் அவரும் சிறுவயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் மட்டு மல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவரின் முதல் கவிதை தொகுப்பு “”””பால் வீதி”” 1974-ம் ஆண்டு வெளி வந்தது. ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கி யங்களை தமிழில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
 இவர் 1999-ம் ஆண்டு எழுதிய “”””ஆலாபனை”” கவிதை தொகுப்பு சாகித்திய அகாடமி விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது, கலைஞர் விருது, பொதிகை டி.வி .யின் பொதிகை விருது,  சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top